மாநாடு 07 December 2022
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி , கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.
அப்போது அதிமுகவினருக்கு ஆதரவாக பேசியதால் தமிழக மக்களிடம் தான் பாவமன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், தனது சிறு வயது பருவத்தில் திமுகவிற்காக ஓட்டு கேட்டு அலைந்ததாகவும் அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து தாய் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் கூறினார், தமிழகம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி புரிந்த நேரத்தில் பின்னோக்கி சென்று விட்டதாகவும், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாமல் சிறந்து விளங்குவதாகவும் செந்தில் பாலாஜியையும் புகழ்ந்து பேசினார், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியாக இல்லை கம்பெனியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்தவர் திமுகவை விமர்சிப்பதற்கு அதிமுகவில் யாருக்கும் எந்த தகுதியும் இல்லை என்றார்.
முன்னதாக கோவை செல்வராஜ் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல குழுக்கள் உருவானபோது ஓ.பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக கருதப்பட்டவர் என்பதும் அதிமுகவின் பல்வேறு குழுக்களில் இருந்தும் மாற்றுக் கட்சியில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள் என்பதும், நேற்று டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்திற்கு 40 கட்சி தலைவர்களை பிரதமர் மோடி அழைத்திருந்ததும் அதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பது என்கின்ற இவர்களின் சண்டையில் மாற்றுக் கட்சியினர் பயன் பெற்று வருகிறார்கள் என்பதும், இச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்தால் அதிமுக என்ற ஒன்றே இருக்காது என்பதும் அதிமுக அடிப்படை தொண்டனின் கவலையாக இருக்கிறது.