மாநாடு 20 ஏப்ரல் 2023
தஞ்சாவூர் மாநகராட்சியில் எந்த வேலைகளுமே சரியாக முறையாக தரமாக நடைபெறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே தான் இருக்கிறது அதில் சில மட்டும் அனைவருக்கும் தெரிய வருகிறது.
பொதுவாகவே எந்த ஒரு வேலையாக இருந்தாலும் வேலை வாங்குபவர்கள் தரமானவர்களாக இருந்தால் மட்டுமே யாரிடம் வேலை ஒப்படைக்கப்படுகிறதோ அவர்களின் தரத்தை அறிந்து அந்த வேலையை செய்ய இவர்கள் தகுதியானவர்களா தரமானவர்களா என்பதை நன்கு ஆராய்ந்து அந்த வேலையை அந்த நபரிடம் அந்த நிறுவனத்திடம் கொடுப்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் தஞ்சாவூரில் அதிலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் காசு கொடுத்தால் எந்த வேலை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற நிலை தான் இருப்பதாக வெகு மக்கள் கூறுகிறார்கள்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் சிராஜுதீன் நகர் பெரிய சாலை என்கிற பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் நாள்தோறும் ஏறக்குறைய பல்லாயிரக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள் ஏனெனில் கீழவாசல் பகுதியில் இருக்கும் பல்வேறு தெருக்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் அலுவலகங்களுக்கு செல்லும் மக்களும் வியாபாரிகளும் இந்த வழியை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.
மேலும் தனியார் கல்லூரி பேருந்துகள், பள்ளி வாகனங்கள் இந்த வழியாக சென்று தான் மாணவ மாணவிகள் ஏற்றி செல்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் ஏறக்குறைய மூன்று மாதங்களாக ஆதம் வடிகால் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில்.. பாலம் திறக்கப்பட்டு பத்து நாட்கள் கூட ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை மணல் ஏற்றி வந்த லாரி இந்த பாலத்தைக் கடக்கும் போது பாலம் இடிந்து விழுந்து லாரி இந்தப் பாலத்தில் சிக்கி வானத்தைப் பார்த்து . தஞ்சாவூரின் மானத்தை வாங்கிக் கொண்டு நிற்கிறது.
தஞ்சாவூர் கட்டுமான கலைக்கு மிகவும் புகழ்வாய்ந்தது அதை மெய்ப்பிக்கும் வகையில் ஓடுகிற தண்ணீரை நிறுத்தி கட்டப்பட்ட கல்லணை இதே தஞ்சாவூரில் தான் இருக்கிறது.
காலங்காலமாக தமிழர்களுக்கு கட்டிடக்கலையில் உள்ள பேரறிவை பறைசாற்றி கொண்டு கால பொக்கிஷமாக நம் கண்ணெதிரே இருக்கிறது தஞ்சாவூர் பெரிய கோயில்.
இப்போது இடிந்து விழுந்து இருக்கின்ற பாலம் எங்கு தொடங்குகிறதோ அந்த இடத்தில் இருந்தே அதன் கட்டுமானம் தரமற்றதாக இருக்கிறது என்றும் பாலம் கட்டப்பட்ட கம்பியோடு சிமெண்ட் சரியாக கூட பயன்படுத்தப்பட்டு ஒட்டப்படவில்லை என்கிறார்கள் மக்கள்.
தஞ்சாவூரில் பழங்காலமாக கட்டிடங்கள் நிலைத்து நிற்கிறதே அது தான் தமிழரின் அறம் !
தஞ்சாவூரில் 10 நாட்களில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுகிறதே இதுதான் திராவிட விளம்பரம் !
என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று இருப்பதற்கு காரணமான ஒப்பந்ததாரர்களையும் ஒப்பந்ததாரர்களுக்கு இப் பணிகளை கொடுத்தவர்களையும் , இந்தப் பாலத்தின் உறுதி தன்மையை முழுவதுமாக ஆராயாமல் மக்கள் பயன்படுத்தும் போது வேடிக்கை பார்த்து கொண்டு அலட்சியமாக மக்கள் மீது அக்கறையற்ற முறையில் நடந்து கொண்ட தஞ்சாவூர் மாநகராட்சியின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதற்குக் காரணமான ஒப்பந்ததாரர் மீதும் சரியாக கண்காணிக்காமல் இருந்த அதிகாரிகள் மீதும் அலட்சியப் போக்கில் நடந்து கொண்டிருக்கின்ற தஞ்சாவூர் மாநகராட்சியின் மீதும் நடவடிக்கை எடுப்பாரா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ?
அதிக செய்திகளை அறிய அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழை படியுங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான கடைகளில் கிடைக்கிறது.