மாநாடு 2 ஜீன் 2023
இசை மாமேதை இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் திரைத்துறை ஆளுமைகளும் தங்களது வாழ்த்துக்களை இசைஞானிக்கு தெரிவித்து வருகிறார்கள் அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கீழ்க்கண்டவாறு தனது வாழ்த்துக்களை இளையராஜாவிற்கு தெரிவித்திருக்கிறார்.
பண்ணைபுரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை மேதை. காலத்தை கடந்து நிற்கும் காவியப் பாடல்களை பிரசவிக்கும் தங்கத் தமிழிசையின் தாயகம்.
உலகம் தழுவி தமிழினத்தின் முகவரியை தனது தேனிசைக் கரங்களால், தன் ராக வரிகளால் பொறித்த இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன்.
ஒவ்வொரு தமிழனின் உள்ளும் புறமும் நிரம்பி வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ததும்பி கொண்டே இருக்கும்
வற்றாத இசை ஊற்று.
உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் மண் மணம் மாறாத தன் மங்கா இசையால் தமிழர்களின் நினைவுகளை மீட்டி, தாய் நிலத்தின் கனவுகளை ஊட்டி ஆற்றுப்படுத்தும்
அன்னைத் தமிழின் இசைக் கருவறை.
தரணியில் எம் தமிழ் தங்கும் வரை,
உலவுகின்ற
காற்று இந்த உலகத்தில் உள்ளவரை,
காதுள்ள மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கும் வரை,
எம் மண்ணின் ஈடு இணையற்ற இசைக் கலைஞன் இசைஞானி இளையராஜா இருந்து கொண்டே இருப்பார்.
தமிழர்களின் இசை அடையாளம்,
எல்லைகள் அற்ற இசை மேதை இளையராஜா அவர்களின் பிறந்த நாளில் வாழ்த்தி வணங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.