மாநாடு 1 july 2022
தமிழ்நாட்டில் இந்நாட்டின் குடிமகனுக்கு இருக்கின்ற மரியாதைக்கு சற்றும் குறைவில்லாமல் மதிக்கப்படுகின்ற நபர்கள் டாஸ்மாக் குடிமகன்கள். இவர்கள் இந்த இடம் ,அந்த இடம் என்று எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எந்த இடம் கிடைக்கிறதோ அந்த இடத்தையே சொர்க்கமாக நினைத்து சாலை ஓரங்களில் அமர்ந்து குடித்து கும்மாளம் போடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.
முன்பெல்லாம் குடிகாரர்கள் காவலர்களைக் கண்டால் பயந்து ஓடி ஒளிவார்கள் ஆனால் சமீப காலமாக காவலர்களை குடிகாரர்கள் மிரட்டுவதும் வம்பு இழுப்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்களின் செய்தி வாயிலாக அறிய முடிகிறது ,
அதேபோல் ஒரு நிகழ்வு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் கடைத்தெருவில் சூர்யா என்கிற நபர் போதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களிடமும் கடைக்காரர்களிடமும் பிரச்சனை பண்ணிக் கொண்டிருந்தார்.
இதைப் பற்றி அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தெரிய வந்திருக்கிறது அதனை எடுத்து காவலர் மணிகண்டன் பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கின்ற அந்த நபர் இருக்கின்ற பகுதிக்கு வந்திருக்கிறார், போதையில் இருந்த சூர்யாவை வீட்டிற்கு செல்லும்படி கூறி இருக்கிறார் காவலர்.
உடனே போதையில் இருந்த சூர்யா என்னை வீட்டுக்கு போக சொல்ல நீ யார் என்று கேட்டுக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் மணிகண்டனின் கழுத்து, காது மடல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்க தொடங்கி இருக்கிறான்.
இதில் படுகாயம் அடைந்த காவலர் மணிகண்டன் துடித்திருக்கிறார் இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து காவலரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார்கள் அங்கு காவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவலரை குத்தி விட்டு தப்பி ஓடிய சூர்யா மீது அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார்கள். தலைமறைவாக இருந்த சூர்யாவை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள்.
போதை ஆசாமி காவலரை கடைத்தெருவில் வைத்து கத்தியால் குத்திய நிகழ்வால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.