மாநாடு 21 January 2023
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 16 வது மாநாடு தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்தியாவில் பொது கல்வி கட்டமைப்பை சிதைத்து, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக, பாடத்திட்டத்தில் அறிவியலுக்கு புறம்பாகவும், மத அடிப்படையில் கருத்துக்களை திணிக்கின்ற தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும், அதேபோல அனைத்து கல்வி வளாகங்களிலும் மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக ,தரமாக கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை மையமாகக் கொண்டு தஞ்சாவூரில் அரசு சட்டக் கல்லூரியை துவக்க வேண்டும் , விவசாயம் சார்ந்த டெல்டா மாவட்டங்களுக்கு அரசு வேளாண் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்ற தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் மருத்துவர் ச.சுதந்திர பாரதி மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர். ஆர்.முகில் மாநாட்டினை துவக்கி வைத்த உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெ.ல.ஜீவா வேலை அறிக்கை வாசித்தார்ஶ்ரீ. சமுதாய கடமைகளில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, மாணவர் பெருமன்றத்தின் வரலாறு மற்றும் எதிர்கால கடமைகள் என்ற தலைப்பில் பேராசிரியர். கோ. பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டினை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாணவர் பெருமன்றத்தில் மாநில துணைச் செயலாளர் ஜி.ஆர்.தினேஷ் குமார், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.காரல் மார்க்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநாட்டில் மாணவர் மன்ற நிர்வாகிகள் ரோகிணி,ஹரிஷ், செல்வி, முத்துக்குமார், சிபிராஜ், பாலபாரதி, சூர்யா, ராமலிங்கம், வல்லரசு ஆகியோர் பங்கேற்றனர் . முடிவேல் பூமிநாதன் நன்றி கூறினார்.