மாநாடு 24 September 2022
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் திறம்பட இயங்குவதற்காக 2018ம் ஆண்டு காலகட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, என நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு நான்கு இடங்களில் அரசு பள்ளி கல்வி அலுவலகம் இயங்கி வந்தது, அதனை தற்போது ஆளுகின்ற அரசு திடீர் சட்டம் போட்டு ஒரத்தநாடு மற்றும் கும்பகோணத்தில் இயங்கிய பள்ளி அலுவலகத்தை இழுத்து மூட திட்டமிட்டப்பட்டது.
இப்படி செய்தால் அரசு பள்ளிகள் இயங்குவது தடைப்படும் எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி கடந்த 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம் ஒரு மனுவும் இதே கோரிக்கை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மனுவும் கொடுத்தது அதன்படி வருகிற 30ந் தேதிக்குள் அரசு நிர்வாகம் இத்திட்டத்தை கைவிட வேண்டும் இல்லையென்றால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியது.
இந்த நிகழ்வை நமது மாநாடு இதழிலும், மாநாடு யூட்யூப் சேனலிலும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று அந்தத் திட்டத்தை கைவிடப் போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நன்றியை கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளது.
கும்பகோணம் கல்வி மாவட்டம் மற்றும் ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களை முறையே தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களோடு இணைக்க கூடாது எனவும், இணைப்பை முன்னிறுத்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 21.09.2022 அன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் எங்களது கோரிக்கையை ஏற்று கும்பகோணம் மற்றும் ஒரத்தநாடு கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரத்தநாடு, கும்பகோணம் கல்வி மாவட்டங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் துணை நின்று கோரிக்கை அளித்த அரசு ஆரம்ப பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம், ஒரத்தநாடு பகுதி பெற்றோர், ஆசிரியர் கழகம், தஞ்சாவூர் இடதுசாரிகள் பொதுமேடை சார்பிலும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
நமது மாநாடு இதழின் சார்பாகவும் பாராட்டுகளை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறோம், அதே நேரத்தில் தேவையில்லாமல் ஒரு அறிக்கையை கொடுப்பதும், மக்களை குழப்புவதும் அதன் பிறகு அதனை மாற்றிக்கொள்வதுமாக இருக்கும் செயலை இனிவரும் காலங்களில் நடக்காமல் கவனமுடன் செயல் பட்டு அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறோம்.