மாநாடு 19 November 2022
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழ ராஜ வீதி மாவட்ட அலுவலகத்தில் தலைவர் எஸ்.தனசீலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி கலந்துகொண்டு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசியால் பெண்கள் படுகின்ற துயரங்கள், சிரமங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அரசுசெய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தஞ்சை மாவட்டத்தில், ஒன்றியங்கள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பகலில் மட்டுமே மருத்துவர் வருகின்றனர், இரவில் மருத்துவர்கள் இருப்பதில்லை, இதனால் பிரசவம் உள்ளிட்ட பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், விஷ ஜந்துவினால் உயிருக்கு ஆபத்து, திடீரென குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற உடல்நல குறைகள் உள்ளிட்ட இரவு நேரங்களில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு மிகுந்த சிரமம் இருப்பதால் இரவு நேரங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்.
நீர்நிலை புறம்போக்கில் நீண்ட காலமாக குடியிருந்து வருபவர்களுக்கு குடிசை மாற்று வாரிய திட்டத்தில் குடி இருக்க இடம் மற்றும் நிலம் அளித்து அவர்களை வெளியேற சொல்ல வேண்டும், தஞ்சை மாநகரத்தில் 51 வார்டுகளிலும் குப்பைகள், மழை தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக பல இடங்களில் காணப்படுகிறது. போதுமான சுகாதார பணியாளர்கள் பணியில் இல்லை, தஞ்சை மாநகரத்தின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு போதுமான சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், பெண்கள் தங்களுடை குடும்ப பொருளாதார தேவகளை நிறைவேற்றிட சுய உதவி குழுக்கள் மூலம் கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது, கொரானா காலத்தில் வேலை இல்லாமல் முடங்கி இருந்த காலத்திற்கு நிலுவையில் உள்ள கடனை அடைக்க சொல்லி சுய உதவி குழு.நிர்வாகங்கள் வலியுறுத்தி துன்புறுத்துகிறது, இந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அனைத்து சுய உதவி குழுக்களுக்கும் அரசு வங்கியின் வட்டி சதவீதத்தை கணக்கில் எடுத்து வட்டி நிர்ணயம் செய்ய வேண்டும், சுய உதவி குழுக்களுக்கும் நடைமுறை படுத்த வேண்டும், கந்து வட்டி வசூல் செய்வதை கண்டறிந்து அரசு தடைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்,சொத்து வரி உயர்வுகளை திரும்ப பெற அரசை வலியுறுத்தி மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூரில் இந்த ஆர்ப்பாட்டத்தை காலை 10 மணிக்கு தஞ்சை ரயிலடி முன்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் எஸ்தர் லீமா, தஞ்சை மாநகர தலைவர் ராஜலட்சுமி, ஒன்றிய நிர்வாகிகள் ஒரத்தநாடு எலிசபெத், திருவோணம் மகாலட்சுமி, பட்டுக்கோட்டை ஜானகி, மதுக்கூர் ஜெனிதா, தஞ்சை ஒன்றியம் சிவகாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார் .