மாநாடு 26 February 2023
நமது பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றையும் தற்காலத்தில் மீட்டு உருவாக்கம் செய்து போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு வீதிகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ உலகத்தில் அத்தனை இடங்களிலும் வீதி இறங்கி போராடி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைத்தார்கள்.
அதன் பிறகு ஆண்டு தோறும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா குறைய ஆரம்பித்ததுமே ஜல்லிக்கட்டுக்கான அனுமதி கொடுக்கப்பட்டு அதனை
முறைப்படுத்தி மருத்துவக் குழுக்கள் முன்னேற்பாடாக நிறுத்தி வைக்கப்பட்டு, வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஒழுக்கமுடன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல மஞ்சுவிரட்டுக்களும் பல்வேறு ஊர்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் அல்லித்துறை கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக தற்போது வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டுப் போட்டியினை காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்,
மருத்துவக் குழுக்களும் வந்திருக்கிறார்கள், முன்னேற்பாடு காரணமாக தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது மக்கள் கைத்தட்டி வீரர்களுக்கும், காளைகளுக்கும் உற்சாகம் ஊட்டி மகிழ்ச்சியோடு வடமாடு மஞ்சு விரட்டு போட்டியை கண்டுக்களிக்கிறார்கள்.
வடமாடு மஞ்சுவிரட்டு என்பது ஐந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணிநேரம் கூட நடைபெறும். வடம் என்றால் தமிழில் கயிறு என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவது தான் வடம் மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிறது.