மாநாடு 12 March 2022
பாரினில் பல போரினை கண்ட போதிலும் மக்களின் நல்வாழ்விற்காக நடத்தப்பட்ட போர் என்றாலும் கூட கடைசியில் கையேந்தி நிற்பது கடைக்கோடி மக்கள்தான் என்பதை இந்த போரும் எடுத்துக்காட்டுகிறது .
அண்ணன் தம்பியாக பழகியவர்கள் கூட உணவுக்காக அடித்துக்கொள்ளும் கொடுமையான நெருக்கடியில் இருக்கிறது உக்ரைன் மக்களின் இன்றைய வாழ்க்கை நிலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
உக்ரைன் ரஷ்யா போரினால் உக்ரைன் மக்கள் படும் இன்னல்களை சொல்லி மாளாது. யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்,
அதே சமயம் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறத் தயங்குகிறார்கள். தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்தால் தான் இவ்வுலகில் குழந்தைக்கு இன்பம் ஆனால் தாய் நிலத்தை விட்டு வெளியேறுவது எவ்வளவு பெரிய துன்பம் என்பதை நாம் நன்கறிவோம்.
உக்ரைனில் 16வது நாளாக போர் நீடித்து வருவதால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர். உணவு மற்றும் எரிபொருளைத் தேடி தெருக்களில் அலையும் மக்களின் மீது ரஷ்யப் படைகள் நடத்தும் தொடர் தாக்குதல்களால் சுமார் 40 மில்லியன் மக்கள் வசிக்கும் மரியுபோல் நகரம் சிதைந்து வருவதாக செய்திகள் மூலம் தெரியவருகிறது.
உணவுக்காக ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் அபாயமும் உள்ளதாம் மக்கள் கொள்ளையடித்து பொருட்களை எடுத்துச் செல்வதால் அங்குள்ள பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் காலியாக உள்ளதாம்.
அந்த நகரத்தில் கள்ளச் சந்தையில் காய்கறிகள் விற்கப்படும் நிலையில், இறைச்சிகள் எட்டாக்கனியாக மாறிவிட்டன என்றும் . பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தெருவோரங்களில் நிறுத்தப்படும் கார்களில் பெட்ரோல் திருடுகின்றனர் என்றும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு செல்போன் சேவை முற்றிலும் முடங்கியுள்ளதாகவும். இதனால் மாரியுபோல் நகர மக்கள் நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்ற செய்தி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் கலங்க தான் செய்கிறது.