மாநாடு 24 March 2022
படிக்க மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் கொரோனா நோய் தொற்றிவிடும் என்று பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மூடப்பட்டிருந்தது
ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களின் மனநிலை அவ்வளவு சுமுகமாக முன்பை போல் இல்லை. பல்வேறு இடங்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரித்திருப்பதாகவும் அதனால் விரும்பத்தகாத பல்வேறு நிகழ்வுகள் தினந்தோறும் நடந்து வருவதையும் செய்திகளின் வாயிலாக அனைவரும் அறிய முடிகிறது.
ஒரு அரசு என்பது தற்போது உள்ள சூழ்நிலையை மட்டும் கணக்கிட்டு ஆட்சி செய்தால் அந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதற்கு இப்போது நடக்கின்ற நிகழ்வுகள் ஒவ்வொன்றும் சாட்சியாக அமைகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கூட மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவி திட்டம் தடை செய்யப்பட்டு பெயர் மாற்றத்தோடு மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உயர் கல்வித் திட்டம் என்று அறிவித்து ஒவ்வொரு மாணவியருக்கும் மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் எப்படியாவது அனைவரையும் குறிப்பாக பெண்களையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட அது நிறைவேற வேண்டுமென்றால் குடிப்பகங்களை இழுத்து மூடாமல் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் நிறைவேறாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
ஏற்கனவே ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்ய விளம்பரங்கள் வந்தது போக இப்போதெல்லாம் கருத்தரிப்புக்கு விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. இதற்கும் சமூகங்களில் தினந்தோறும் நடக்கும் குற்றங்களுக்கும் அடிப்படைை காரணமாக இருப்பது மது பழக்கம் தான் என்பதை அறிவுள்ள அனைவரும் அறிவோம்.
தமிழகத்தில் கொரோனா முடக்கத்துக்கு பிறகு ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் கல்வி பணியை சீராக மேற்கொள்ள பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு என்ற முறையில் வீட்டிலேயே இருந்த மாணவர்களை வகுப்பில் அமர வைத்து பாடம் எடுப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.பல இடங்களில் மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் வகுப்புக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். கொரோனா ஊரடங்கின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் உருவங்களும், உடைகளும்,பழக்க வழக்கங்களும் முழுவதுமாக மாறிவிட்டன.
இப்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு, புள்ளிங்கோ ஸ்டைலில் முடியுடன் ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததை போல பள்ளிக்குள் உலாவுவதை ஆசிரியர்கள் கண்டிக்கவே பயப்படுகின்றனர். ஒருவேளை ஆசியர்கள் கண்டித்தால், அவர்களை பார்த்து முறைப்பது, முனகுவது மட்டுமின்றி வெளிப்படையாகவே திட்டவும் செய்கிறார்கள். உண்மையிலேயே அக்கறை உள்ள அரசு இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கின்ற டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும், மூடவில்லை என்றால் வரும் காலத்தில் மது நோய்க்கு அடிமையாகி ஏதாவது ஒரு வகையில் போதை நமக்கு வேண்டும் என்று கருதி பல்வேறு குற்ற சம்பவங்களில் மது நோயாளிகள் ஈடுபட்டு விடுவார்கள் ,சமூகமே பெரும் குற்ற சமூகமாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்பதே உண்மை.
முதல்வர் நினைத்தால் மூடலாம் முதல்வர் நினைப்பாரா? பொருத்திருந்து பார்க்கலாம்
வீடியோ லிங்க்: