மாநாடு 23 February 2022
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் சில வெற்றிகளைப்பதிவு செய்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.
ரசிகர் மன்றங்களிலிருந்து நகர் மன்றங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா விஜய் மக்கள் இயக்கம்? எப்படிச் சாத்தியமானது இது? என்ன செய்தது விஜய் மக்கள் இயக்கம்?
சென்ற முறை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக வெற்றி பெற்றவர்கள் என்று ஒரு பட்டியல் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே ஆனால் அப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாநில தலைமை தேர்தலுக்கு முன்பாக எந்தவித அறிவிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் விஜய் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தி இருந்தது விஜய் மக்கள் இயக்கத்தின் முதன்மை நிர்வாகியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளை சென்னையில் அழைத்து கூட்டம் போட்டு இந்த தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற வியூகமும் வேலைத்திட்டமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது அதன்படி அந்தந்த மாவட்டத்தின் தலைவரே இந்தத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக நிற்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் எப்படி தேர்தலை சந்திப்பது என்று திட்டமிட்டிருந்தார்கள்.
அதன்படி தூத்துக்குடி பகுதி மாவட்ட பொறுப்பாளர் பில்லா ஜெகன் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே தூத்துக்குடி சார்பாக விஜய் மக்கள் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறது அது மட்டுமல்லாமல் அதன் வெற்றிக்காக களத்தில் வேலையும் செய்வோம் என்று அறிவித்திருந்தார்.மற்ற பல மாவட்டங்களில் அறிவிக்கவில்லை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் விருப்பப்படியே தேர்தலை சந்தித்தார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக வெற்றி பெற்றவர்கள் மேலும் இருப்பின் இணைக்கப்படும்.
புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன்,
திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அத்துடன் சென்னையின் ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத்தள்ளி 2வது இடத்தையும் பெற்றுள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது நெடுங்கால விவாதமாக இருந்து வரும் நிலையில், மெல்ல மெல்ல விஜய் மக்கள் இயக்கம் பெறும் இந்த வெற்றி கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.வெறுமனே ரசிகர்கள் மட்டும் களமிறங்கியிருந்தால் இது கவனம் பெறப்போவதில்லை. ஆனால், தேடித்தேடி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களை இணைத்திருக்கிறார்கள் என்ற பின்புலத்திட்டம் தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 136ஆவது வார்டில் 22 வயது மாணவியான நிலவரசி துரைராஜ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். தமிழகத்தில் வெற்றி பெற்ற இளம்பெண்கள் மூவருமே 22 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 22 வயதில் வென்ற வார்டு உறுப்பினரான இவர் கவனிக்கப்பட்ட வேட்பாளராக உள்ளார். ஆனால், இதே வார்டில் இரண்டாம் இடம் பெற்ற அறிவுச்செல்வி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஆவார்.
நிலவரசி துரைராஜ்
நிலவரசி துரைராஜுக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அதிமுக வேட்பாளரான லக்ஷ்மி கோவிந்தசாமி.
தேர்தல் முடிவுகளின்போது லக்ஷ்மி துரைராஜ் வெறும் 1137 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
7122 வாக்குகள் பெற்ற நிலவரசிக்கு அடுத்த இடத்தில் இருந்தது
விஜய் மக்கள் இயக்கத்தைச்சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அறிவுச்செல்வி. அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5112.
அறிவுச்செல்வியின் பின்னணி வேறு:
அறிவுச்செல்வியின் கணவர் குணசேகரன் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் வென்று ஏற்கனவே இந்த வார்டில் கவுன்சிலராக பொறுப்பில் இருந்திருக்கிறார். பின்நாட்களில் அதிமுகவில் இருந்து விலகிய இவர், சுயேச்சையாகப் போட்டியிட முடிவெடுத்திருந்த நிலையில், 136ஆவது வார்டு பெண்களுக்கான வார்டாக அறிவிக்கப்பட்டதால் அறிவுச்செல்வி நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அறிவுச்செல்வி கூறியதாவது :
என் கணவர் முன்பே இந்த வார்டின் உறுப்பினராக இருந்தவர்.அவருக்கு இந்த வார்டின் பிரச்னைகள் நன்றாக தெரியும். ஆனால் இந்த முறை என் கணவர் போட்டியிட முடியாததால் நான் போட்டியிட்டேன் என்று கூறினார்.
அப்படியெனில் வேறு கட்சிகள் மூலம் சீட் பெறாமல், நேரடி சுயேச்சையாகவும் அல்லாமல் விஜய் மக்கள் இயக்க ஆதரவுடன் சுயேச்சையாக நின்றது ஏன் என்ற கேள்விக்கு
நாங்கள் போகவில்லை என்ற அறிவுச்செல்வி நாங்கள் சுயேச்சையாகத்தான் நின்றோம். பிறகு விஜய் மக்கள் இயக்கத்தினர் எங்களைத்தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவிப்பதாகக்கூறி இணைந்து கொண்டனர். அவர்களாகத்தான் தேடிப்பார்த்துவிட்டு வந்து ஆதரவு தெரிவித்தார்கள். நாங்களும் ஒப்புக் கொண்டோம் என்றார்.
என் கணவரின் அரசியல் செல்வாக்கும், விஜய் ரசிகர்களின் வாக்குகளும் சேர்ந்ததால்தான் இந்த வாக்கு எண்ணிக்கை சாத்தியமானது. விஜய் மக்கள் இயக்கத்துடன் சேர்ந்த பிறகு எங்களுக்கு வரவேற்பு அதிகரித்ததை உணர முடிந்தது என்றும் தெரிவித்தார்.
ரசிகர்கள் வேட்பாளர்களாக களமிறக்குவது ஒருபுறம் என்றால் சுயேச்சை வேட்பாளர்களில் குறிப்பிட்டவர்களைத்தேர்வு செய்து ஆதரவு வழங்கும் வேலையையும் செய்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்