மாநாடு 21 February 2022
தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் நாளை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பெரும்பாலும் வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின. தலைநகர் சென்னையில், 43 சதவீத வாக்குகளே பதிவாகின.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நிலவியதாகவும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம்,தேமுதிக மற்றும் பல கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, வண்ணாரப்பேட்டையில் உள்ள வார்டு எண் 51ல், வாக்குச்சாவடி எண் 1174 மற்றும் பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள வார்டு எண் 179ல், வாக்குச்சாவடி எண் 5059 ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17ல் வாக்குச்சாவடி 17 டபிள்யு மற்றும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16ல் வாக்குச்சாவடி 16 எம், வாக்குச்சாவடி 16 டபிள்யு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25ல், வாக்குச்சாவடி 57 எம், வாக்குச்சாவடி 57 டபிள்யு ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலே குறிப்பிட்ட 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், கடைசி ஒரு மணி நேரம் அதாவது,மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது அதன்படி இப்போது மறுவாக்கு பதிவு நடந்து கொண்டிருக்கிறது.