மாநாடு 9 March 2022
தஞ்சாவூர் நகர பகுதியை இணைக்கும் பாலமான இரண்டு முக்கிய ஆற்றுப்பாலங்கள் வழிகள் துண்டிக்கப்பட்டு பாலங்களை அகலப்படுத்தி புதிதாக கட்டப்பட உள்ளது இதற்கு முன்னறிவிப்பாக கடந்த 6ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் மூலம் பத்திரிக்கையின் வாயிலாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
அதன்படி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில் முதற்கட்டமாக தஞ்சாவூர் நகரப்பகுதியில் உள்ள இர்வின் ஆற்றுப்பாலம் பாதை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தை மாற்றுப்பாதையில் அனுப்பி உள்ளார்கள்.
கருந்தட்டங்குடியிலுள்ள ஆற்றுப் பாலம் எப்போது வேண்டுமென்றாலும் அடைக்கப்பட்டு மாற்றுப் பாதைக்கு போக்குவரத்தை திருப்பி விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் மானாமதுரை சாலையில் கி.மீ. 68/4ல் வடவாறு கரந்தை மற்றும் கி.மீ. 70/4ல் கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் ஆற்றின் குறுக்கே செல்லும் தற்போது உள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக இருவழித்தட அகலம் கொண்ட இரண்டு புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்படவுள்ளது.
கரந்தை – வடவாறு பாலப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு
கரந்தை வடவாறு பாலப்பணி நடைபெறுவதால் 09.03.2022 புதன்கிழமை முதல் இவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டு, கும்பகோணம் மற்றும் திருவையாறு சாலையிருந்து வரும் நகரப் பேருந்துகள் , இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை வழியாக வந்து வடக்குவாசல், சிரேஸ் சத்திரம் சாலை, ஏ.ஓய்.ஏ நாடார் சாலை வழியாக கொடிமரத்துமூலை வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்துசெல்ல வேண்டும்.
சென்னை, அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து வரும் புறநகர் பேரூந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை ரவுண்டானா, தாமரை, பெஸ்ட் பள்ளிகள் வழியாக மாரியம்மன்கோயில் புறவழிச்சாலை வழியாக தொல்காப்பியர் சதுக்கம் வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்துசெல்ல வேண்டும்.
இதைப்போலவே ஆற்றுப்பாலம் இர்வின் பாலம் வேலை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது
ஆற்றுப்பாலப்பணி நடைபெறுவதால் 09.03.2022 புதன்கிழமை காந்திஜி சாலையில் – அண்ணா சிலையிலிருந்து இர்வின் பாலம் வரை போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டு, அனைத்தும் வாகனங்களும் பழைய நீதி மன்ற சாலை, பெரிய கோவில் சாலை சோழன் சிலை வழியே அண்ணா சிலை வந்துசெல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பாலபணிகள் வரும் ஜீன் மாதம் இரண்டாவது வாரம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வகையில் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்