மாநாடு 4 April 2022
தமிழகத்தில் தினந்தோறும் டாஸ்மாக் குடிநோயாளிகளால் எல்லா விதத்திலும் போக்குவரத்து மேற்கொண்டு, பிணம் எரிக்கும் இடம் வரையிலும் அனைத்து இடங்களிலும் இவர்களின் அட்டூழியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவலர்களை பணியில் அமர்த்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது வழக்கம்.ஆனால் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தினந்தோறும் மிரட்டலும்,அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதை செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் காவலரை ஒரு குடிகாரன் வம்பிழுத்து தர்ம அடி வாங்கியது தொலைக்காட்சி செய்திகளில், சமூக ஊடகங்களில், வைரலானது.
இதனைத் தொடர்ந்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை மது பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சீத்தளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழா முடிந்தவுடன் ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது. இந்த விழாவில் அசம் பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பேரளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இளைஞர்கள் சிலர் மது போதையில் பாடலை கேட்டு ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டு நடனமாடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் குமரவேல் இளைஞர்களை தரையில் அமர்ந்து பாருங்கள் என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) பீர் பாட்டிலை எடுத்து காவலர் குமரவேல் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவலர் குமரவேலை காவல்துறையினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது.