மாநாடு 19 June 2022
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் ஒன்று .தஞ்சாவூரை எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்காக பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் காரணமாக பல கட்டிடங்கள் கடைகள் இடிக்கப்பட்டு கிடக்கின்றது. இதன் காரணமாகவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.அப்படியான சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து காவல் துறையினரும் ,போக்குவரத்துகளை சரிப்படுத்தி முறைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதும் சில தனியார் நடத்தும் கடைகளின் ஒழுங்கற்ற அலட்சிய போக்கால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறான கடைகளை அவ்வப்போது ஆதாரத்துடன் நமது மாநாடு இதழில் செய்தியாக வெளியிட்டு சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
இன்று அதே போல ஒரு நிகழ்வு தஞ்சாவூரின் முக்கிய வீதியான கீழராஜ வீதியில் அமைந்துள்ள குறிஞ்சி மெட்ரோ பஜார் சூப்பர் மார்க்கெட் என்கிற கடையின் வாகனம் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டு இருந்ததால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற பொதுமக்கள் சாலைகளின் இரு பக்கமும் வெகு நேரம் நிற்க வேண்டியதாகி இருந்திருக்கிறது.இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு இருக்கின்றார்கள் .
இதனைப் பற்றி அந்த பகுதியில் அதிகமாக பயணிப்போர் கூறும்போது எப்போதுமே இந்த கடையின் வாகனம் இவ்வாறாக பொதுமக்களுக்கு இடையூறு தருவது வாடிக்கை தான் என்கிறார்கள், எப்போதுமே மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில் எமர்ஜன்ஸி எக்ஸிட் என்ற அவசர வழியை வைக்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கடியில் உள்ள இந்த கடைக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேள்வியையும் எழுப்புகிறார்கள். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் ,மாநகராட்சி நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் துன்பத்தைப் போக்க வேண்டும்.