மாநாடு 25 July 2022
முகமது ரியாஸ் தீன் என்பவரிடம் கொடுக்கப்படாத கடனுக்கு பணம் கேட்டு மிரட்டி எங்களுக்கு பணம் தரவில்லை என்றால் உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உன் செல்போனில் உள்ள அனைத்து நபர்களுக்கும் அனுப்பப்படும், அது மட்டுமல்லாமல் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று செல்போன் மூலம் கடன் தருவதாக கூறப்பட்ட செயலியை சேர்ந்தவர்கள் மிரட்டி உள்ளனர்.அவரின் புகைப் படங்களும் ஆபாசமாக சித்தரித்து அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது ,இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ரியாஸ் தீன் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.எஸ் நிஷாவிடம் புகார் அளித்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீரநல்லூரை சேர்ந்தவர் ரியாஸ் தீன் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி மாவட்ட பொதுச் செயலாளராகவும், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்க உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் செல்போனில் உள்ள கடன் செயலி (new cash) மூலம் கடன் பெற விண்ணப்பித்துள்ளார் அதற்காக ஆதார் அட்டை, புகைப்படங்கள் மேலும் அவர்கள் கேட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார், இவை அனைத்தையும் பெற்றுக் கொண்ட New Cash என்கிற கடன் செயலி பணம் ஏதும் அவருக்கு தரப்படாமல் இழுத்தடித்து வந்திருக்கிறது. அதன் பிறகு ரியாஸ் தீன் அலைபேசிக்கு அந்த செயலியில் இருந்து நீங்கள் பெற்ற கடனை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என்று கேட்டதாகவும் அதற்கு ரியாஸ் தீன் நீங்கள் எனக்கு கடன் கொடுக்கவே இல்லையே நான் எப்படி வாங்காத கடனுக்கு பணம் கொடுக்க முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது கேட்கும் பணத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் உங்களது புகைப்படங்களை நிர்வாணமாக சித்தரித்து உங்கள் அலைபேசியில் உள்ள அனைவருக்கும் அனுப்பி உங்களை அசிங்கப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர், இவர் பணம் கொடுக்க மறுக்கவே ரியாஸ் தீன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனைவருக்கும் அனுப்பி உள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் தீன் சீர்காழி காவல் நிலையத்திலும் ,மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். நிஷாவிடமும் இதைப் பற்றி புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுபோல பலர் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வருகிறது,அவர்களின் புகார்களை சைபர் கிரைம் காவலர்கள் பதிவு செய்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். காவல்துறையினர் எவ்வளவோ முறை எச்சரித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இல்லாமல் இது போன்ற செயலியை பயன்படுத்தி தங்களது பணத்தையும், மானத்தையும் இழக்கிறார்கள் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையினர் தீவிரமாக கள்ளக்குறிச்சியில் வாட்ஸ் அப்பில் இணைந்தவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியதை போல, இது போன்ற மோசடி ஆப்களை தடுத்து பொதுமக்களை காக்கும் பணியில் அரசும் காவல்துறையும் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.