மாநாடு 29 July 2022
ஓடி ஓடி ஓட்டு வாங்கி கொடுத்தவர்கள், ஓட்டாண்டியாய் நிற்கின்றோம், காது கொடுத்து கேளுங்கள் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றோம், ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றியது போல கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்புடையதல்ல ,இது மன்னர் ஆட்சி அல்ல ,மீண்டும் 5ஆண்டுகளுக்குப் பிறகு மக்களை சந்திக்க வேண்டும்.
அப்போது நாங்கள் முழுவதும் ஒத்துழைக்க வேண்டும் ,ஓட்டு போட வேண்டும் அதற்கு தகுந்தார் போல் இந்த அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று நெடுநாள் கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது, இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தீர்வு காண தவறும் பட்சத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் செய்யப்படும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு உறுதுணையாகவும் கிராம கூட்டுறவு வங்கிகள், ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் என 5000க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு, சேவையாற்றி வருகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதிய ஒப்பந்தம் குறித்து இதுவரை பேசவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சொற்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனையயில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகமாகி, அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக தொல்லைகள் கொடுக்கும் போக்கு அதிகரிக்கப்பட்டு வருகின்றது, பதிவாளர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டுமென்றும் தமிழ்நாடு முழுவதும் தர்ணா போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
அதில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேசப்படாமல் கிடப்பில் உள்ளது, உடனடியாக பேசி முடித்து தீர்வு காண வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியம் 10,000 ரூபாய் வழங்கிட வேண்டும், ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து சம்பளம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் தற்போது உள்ள பணிநிலை திறன் திருத்தி அமைக்கப்பட வேண்டும், நிரந்தர துணை ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,
காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட கூற்ற வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதேபோல வங்கிகளின் நலன் பாதுகாக்கப்பட கூட்டுறவு வங்கிகளில் தேவையான அமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், ஒன்றிய அரசு விவசாய கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கி வந்த 2 விழுக்காடு வட்டி உதவித்தொகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும், தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகள் கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும், நகர வங்கிகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை மற்றும் வளர்ச்சி வங்கிகள் அவற்றின் பணிகள் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்து ,மதித்து தீர்வு காணாவிட்டால் வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இந்தப் போராட்டத்தை ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் ஆர்.கோவிந்தன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சுரேஷ், பொருளாளர் டி.ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் சி.சிவமணி, தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயலாளர் கே, கந்தவேல், ஓய்வு பெற்ற நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் என். எஸ் .பாண்டியன், தஞ்சை மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க பொருளாளர் ஏ.நெப்போலியன், தஞ்சை மாவட்ட தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் டி. ஆர். மனோகரன், தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் ஆர். வீரசேகர் , தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பொதுச்செயலாளர் எஸ்.குமார் , ஓய்வு பெற்ற அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் என்.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், இன்சூரன்ஸ் பணியாளர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் ஆர்.புண்ணியமூர்த்தி, தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்க செயலாளர் டி.சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் நிறைவுரையாற்றினார்.