மாநாடு 21 December 2022
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை நிர்வாகம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு கடன் சொல்லி வந்திருக்கிறது, அதன் பிறகு திருஆரூரான் சர்க்கரை ஆலை கடன் சுமையால் இயக்க முடியாத நிலைக்கு வந்து விட்டதாக கூறியிருக்கிறது.
விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையையும் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே வந்திருக்கிறது, அது மட்டுமல்லாமல் விவசாயிகள் ஒவ்வொருவரின் பேரிலும் வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளது இதன் காரணமாக விவசாயிகளின் சிபில் ஸ்கோர் என்கிற கடன் நாணய தகுதி கெட்டுப் போயிருக்கிறது இதனால் விவசாயிகள் கல்வி கடன் உட்பட எங்கும் எவ்வித கடனும் வாங்க முடியாத சூழல் தொடர்ந்து நிலவுகிறது, இதனிடையே தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் வந்திருக்கிறது.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியை திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கி அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவை களம் காண வைத்தது திமுக. தேர்தல் பரப்புரையின் போது திமுகவினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இன்றைய பாபநாச சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஜவஹிருல்லா தேர்தல் வாக்குறுதியாக மக்களிடத்தில் நான் வெற்றி பெற்று இந்த சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரானால் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே எடுத்து நடத்த ஏற்பாடு செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும், அதனை நம்பி விவசாயிகள் அனைவரும் திமுகவிற்கு வாக்களித்ததாகவும் ஆனால் கடந்த 21 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வரும் வேளையில் இதுவரை ஒரு முறை கூட நேரடியாக வந்து ஆறுதலாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றும் தெரிய வருகிறது. அது மட்டுமல்லாமல் கடனில் இருக்கும் ஏறக்குறைய 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆருரான் சர்க்கரை ஆலையை திமுகவின் முக்கிய புள்ளி 147கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஆலை நிர்வாகம் கொடுக்க வேண்டும் எங்கள் பேரில் உள்ள கடன் தொகையை ஆலை நிர்வாகமே ஏற்று எங்கள் பேரில் உள்ளதை நீக்க வேண்டும், இதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திமுகவின் தலைவர் ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு திருமண்டங்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கரும்பு விவசாயிகள் 22 ஆம் நாளான இன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தார்கள்.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் பெருந்திரளாக விவசாயிகளும் அவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் என ஏறக்குறைய 500 பேர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழுமியிருந்தார்கள், பெருந்திரளாக கூடியிருந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக அளவில் காவலர்களும் , காவல்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டு இருந்தார்கள், இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு அமைக்கப்பட்டு காவலர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், நேரம் செல்லச் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகளும், விவசாயிகளுக்கு ஆதரவானவர்களும் வரத் தொடங்கினார்கள் ஏறக்குறைய 11.30 மணி அளவில் காவலர்கள் அமைத்திருந்த தடுப்புகளையும் தாண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல விவசாயிகள் முற்பட்டார்கள்,
அப்போது காவலர்களுக்கும் , விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் அந்தப் பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது.
விவசாயிகளை காவலர்கள் தடுத்து நிறுத்தியதையடுத்து சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வெளியிலேயே அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இவர்கள் அனைவரையும் காவலர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றி நாஞ்சிக்கோட்டை சாலையில் இருக்கும் இருதய சாமி நாடார் திருமண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்.
இப்போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தங்கக் காசிநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில போராட்ட குழு தலைவரும் தஞ்சாவூர் மாவட்டத் தலைவருமான சிமியோன் சேவியர் ராஜ் , விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். வீடியோவாக பார்க்க லிங்கை தொடவும் : https://youtu.be/hDcjLbTu3x4