மாநாடு 17 January 2023
தமிழர்களின் திருநாளான உழவர் திருநாள் என்பது யாரும் கொண்டு வந்து கொடுத்து புகுத்தியதால் கொண்டாடப்படும் செயற்கையான விழாவல்ல
பன்நெடுங்காலமாக நமது கொண்டாட்டத்தோடு, நமது பாரம்பரியத்தையும், வீரத்தையும், மண்ணின் மரபையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி இயற்கையை போற்ற, பாதுகாக்க வைக்கும் பண்பாட்டு விழாவே தமிழர் திருநாளான பொங்கல் விழா.
பல்வேறு போற்றுதலுக்குரிய, போற்றி , உறவு பாராட்டி கூடி கொண்டாட வேண்டிய தமிழர் திருநாள் கடந்த சில ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றால் கலை இழந்து காணப்பட்டது.
இப்போது கடந்த கால தீயவை ஒழிந்து, தூயவை தொடங்க ஆரம்பித்திருப்பதை முன்னிட்டு , இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரியமான சல்லிக்கட்டு உட்பட அனைத்து இடங்களிலும் சீரோடும் , சிறப்போடும் நடைபெற்று வருகிறது,
அதனை காண்பதற்காகவும், அன்பை கொட்டிக் கொடுக்கும் உறவினர்களோடு உறவு பாராட்டவும், குழந்தைகளை அழைத்துக் கொண்டு பல்வேறு ஊர்களில் இருப்பவர்களும், தங்களது தாய் கிராமங்களுக்கு சென்று இருப்பதையும் அறிய முடிகிறது.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் இயங்குகின்ற பள்ளிகளுக்கு இந்த ஆண்டு 15 ,16 ,17 ஆகிய 3 நாட்களும் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது, இதனை ஒழுக்கத்தையும், அறநெறியையும், சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்கின்ற, கடைப்பிடிக்க போதிக்கின்ற பள்ளிகள் கடைபிடித்திருக்கிறது.
ஆனால் சில பள்ளிகள் அரசின் அறிவிப்பை மீறி இன்று திறக்கப்பட்டு தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் அனைவரையும் வரவழைத்து இருக்கிறது.
இந்தப் போக்கினை இனிவரும் காலங்களில் எந்த பள்ளிக்கூடங்களும் செய்யக்கூடாது என்பதற்காக, இவ்வாறு இயங்கிய பள்ளிகள் மீது பள்ளிக் கல்வித் துறையும், அரசும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஏனெனில் சட்டதிட்டத்தை மதிக்க வேண்டும் என்று போதிக்கும் தகுதியை, முதலில் சொல்லிக் கொடுப்பவர்கள் கடைபிடிக்க வேண்டும் மீறினால் அரசு தண்டிக்கும் என்ற நிலை உருவானால் மட்டுமே அதில் படித்து வெளிவரும் குழந்தைகள் அரசின் சட்ட திட்டங்களை மதிப்பார்கள்.
ஏனெனில் ஒரு “நாட்டின் எதிர்காலம் பள்ளி அறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது” என்பதை உணர்ந்து நல்ல பிள்ளைகளை வார்த்தெடுக்க வேண்டிய ஆசிரிய பெருமக்களே அரசின் அறிவிப்புகளையும், சட்டதிட்டங்களையும் மீறினால்
கல்வியறையில் கத்தியோடு நுழையும் சில மாணவர்களுக்கு புத்தியை போதிக்கும் தகுதியை பள்ளியும், அப்பள்ளியின் ஆசிரியர்களும் இழக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
இவ்வாறாக இன்று சென்னை
பத்ம சேஷாத்திரி பள்ளிகள் இயக்கப்படும் என்று நேற்று தெரிய வந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா சென்னையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்திற்கு
இந்த போக்கினை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அரசு அறிவிப்பின்படி 17ஆம் தேதியும் பத்ம சேஷாத்ரி பள்ளிகள் விடுமுறை விட வேண்டும் என்றும் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளும் அரசின் அறிவிப்பை ஏற்றும், அதற்கே உள்ள தார்மீக கடமையை உணர்ந்தும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருக்கிற நிலையில்,
தஞ்சாவூர் யாகப்பா நகரில் இயங்கி வரும் பிஷப் தேவதாஸ் அம்ப்ரோஸ் வித்யாலயா என்கின்ற பள்ளி இன்று காலை வழக்கம் போல் தொடங்கப்பட்டு மதியம் 12:30 வரை இயக்கப்படுவதாக செய்திகள் நமது மாநாடு செய்தி குழுமத்திற்கு தெரிய வந்ததை அடுத்து நேரில் கள ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தோம்,
அங்கு சென்று பார்த்ததில் பள்ளி இயங்கியது , சில மாணவர்களிடம் இன்று வகுப்பு நடத்தப்பட்டதா என பேச்சு கொடுத்தோம் , இன்று வகுப்புகள் நடத்தப் படவில்லை என்றும், ஏன் வரச் சொன்னார்கள் என்றும் தெரியவில்லை என்றும் மழலை மொழியில் மனதில் உள்ளதை உறைத்தார்கள் குழந்தைகள்.
வேறு ஏதாவது சிபிஎஸ்சி பள்ளிகள் தஞ்சையில் இயங்குகிறதா என்பதை விசாரித்தோம் அதில் தாமரை பன்னாட்டு பள்ளி உட்பட எதுவும் இன்று திறக்கவில்லை என்று தெரியவந்தது.
சட்டத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களே அரசின் சட்ட திட்டங்களை மீறுவது முறையாகாது என்பதை உணர்த்தும் விதமாக.
தஞ்சாவூர் யாகப்பா நகரில் இயங்கிய பிஷப் தேவதாஸ் அம்ப்ரோஸ் வித்யாலயா பள்ளி, அரசின் ஆணையை மீறி இன்று பள்ளியை திறந்து மாணவர்களை வரவைத்ததை மாவட்ட நிர்வாகமும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்,
தலையிட்டு, இப்பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பள்ளியின் தான்தோன்றி தனத்தினை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் இது போன்ற பல பள்ளிகள் அரசின் சட்ட , திட்டங்களை மதிக்காமல் போவதற்கு இதுவும் ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடும்.
சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகத்தின் கடமை மாநாடு ஊடகம் கடமையை தொடர்ந்து செய்கிறது ,
இந்த சம்பவத்தையும் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி விட்டோம்,
திராவிட மாடல் அரசு தடுக்கிறதா? தடுமாறுகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.