மாநாடு 25 January 2023
தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு. களஞ்சியம் திமுகவையும், தஞ்சாவூர் மாநகராட்சியையும் கண்டித்து அறிக்கை விட்டு இருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் மரணம் அடைந்த விடுதலைப்புலி போசனின் நினைவு கல்லறையை திராவிடக் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள ராஜா கோரி இடுகாட்டில் நிறுவி திறந்து வைத்தார். அந்த கல்லறை கல்வெட்டிலும் இது பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று போசன் நினைவு கல்லறையை திமுக அரசு அராஜகமாக தஞ்சாவூர் மாநகராட்சியை ஏவி விட்டு உடைத்து எறிந்து இருக்கிறது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
தஞ்சாவூரில் இப்படி ஒரு நினைவு கல்வெட்டு இருக்கிறது என்பதை கடந்த 2018 ஆம் ஆண்டு நான் வெளிக்கொண்டு வந்தேன் அப்போது பலரையும் இது ஆச்சரியப்படுத்தியது, அதற்கு முன்பு வரை அந்த இடம் எவ்வித பராமரிப்பின்றி இருந்தது அதனை மறு சீரமைத்து எனது தலைமையில் 27-11-2018 அன்று மாவீரர் நாள் அந்த இடத்தில் முன்னெடுக்க ஏற்பாடு செய்தேன். நிகழ்வை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருந்ததை மீறி நிகழ்வு நடத்தியதால் அன்று நான் கைது செய்யப்பட்டேன்.
அதே இடத்தில் திமுகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறையும் இருக்கின்ற போது திட்டமிட்டு இதை தகர்த்திருக்கிறார்கள். 27-6-1989 ஆம் ஆண்டு மறைந்த போசனின் நினைவு கல்லறையை 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திமுக அரசு இடித்து தள்ளுவது என்பது திமுக அரசின் திட்டமிட்ட தமிழின பகையின் வெளிப்பாட்டையே காட்டுகிறது.
34 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்லறையை ,
தற்போது திமுக அரசு இடித்திருக்கும் செயலைக் கண்டித்து கி.வீரமணி தமிழக முதல்வரிடம் பேசி நினைவு கல்லறை இருந்த இடத்திலேயே மீண்டும் நிறுவ செய்ய வேண்டும், இல்லையென்றால் என் தலைமையில் அதே இடத்தில் போசன் நினைவு கல்லறையை நிறுவ பெரும் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுப்பேன் அதன் வழியாக நினைவு கல்லறையை அதே இடத்தில் நிறுவ செய்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.களஞ்சியம் அவரது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.