Spread the love

மாநாடு 01 March 2023

சில நேரங்களில் நாம் ஆச்சரியப்பட்டு சிலரை பார்த்திருப்போம், அவர்கள் பேசிய பேச்சை பெருமிதத்தோடு ரசித்திருப்போம், ஆனால் சில காலங்கள் கழித்து நாம் ஆச்சரியத்தோடு பெருமிதப்பட்டு ரசித்தவர்கள் பேசுவது பேசியது அம்புட்டும் அம்பக்கு என்று தெரிந்தால் ஒருவித விரக்தி எழுவது இயல்பு தானே அதேபோல தான் இன்றைய ஊடகவியலானகவும் , தொல். திருமாவளவன் பேச்சை கேட்டு ரசித்த அன்றைய மாணவனாகவும் என்னை நிலை நிறுத்தி கவிஞரின் வரிகளான நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும், நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் , ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும், உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும். என்பதை நினைவில் பொருத்தி பார்க்கின்றேன் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேச்சுகளில் அவ்வப்போது எவ்வளவு மாறுபாடுகள், எவ்வளவு வேறுபாடுகள் ,எவ்வளவு முரண்பாடுகள் என்பதை எண்ணி பார்க்கும் விதமாக அமைந்தது நேற்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதாக சொல்லி நடத்தப்பட்ட கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசிய பேச்சு.

நேற்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதாக சொல்லி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது அதில் பலரும் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் பேசியதாவது: நான் நடத்துவது கருத்தியல் யுத்தம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான யுத்தம் கிடையாது, கம்யூனிஸ்டர்களுக்கும் பாஜகவுக்கும் நடைபெறுகின்ற யுத்தம் போல் கிடையாது, விசிகவிற்கும் பாஜகவிற்கும் இடையிலான யுத்தம் கருத்தியல் யுத்தம். கருத்தியல் ரீதியாக மோத தயாரா என்று பாஜகவிற்கு சவால் விட்ட திருமாவளவன் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட உங்களால் இருக்க முடியாது தமிழ்நாட்டில் ஓரு இடத்தில் கூட கொடியேற்ற முடியாது, ஓட ஓட விரட்டியடிப்போம் யாரிடம் வாலை ஆட்டுகிறீர்கள் உங்கள் வேலை பழிக்காது என்று எச்சரித்தார்.

பதவியை பார்த்து பல் இளிப்பவன் அல்ல திருமாவளவன் பதவியை துச்சமாக நினைப்பவன், என் தலையில் இருக்கும் முடியை விட மோசமாக பதவியை நினைப்பவன் நான் சட்டமன்ற உறுப்பினராக ஆன இரண்டு ஆண்டுகளில் பதவியை தூக்கி வீசிவிட்டு வந்தவன் நான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணன் ஸ்டாலின் என்னை அழைத்து உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் போட்டியிடுங்கள், நீங்கள் தோற்கக் கடாது என்றார். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என் சின்னத்தில் தான் நிற்பேன் என்றேன் பதவிக்கு ஆசைப்படுபவனாக இருந்திருந்தால்

உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்கு சம்மதித்து ஒத்துக் கொண்டு தலையாட்டி விட்டு தலை குனிந்து வந்திருப்பேன், நான் அப்படி செய்யவில்லை,பதவியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் பாஜகவை எதிர்ப்பேன் என்னுடைய தில் யாருக்கு இருக்கிறது சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அப்படியே எதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு வந்து பேச்சை தொடர்ந்தார் திருமாவளவன். அதாவது முன்பெல்லாம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஒருவர் பேருந்தில் பயணிகளை கூட்டமாக ஏற்றி விடுவதற்காக கூவி கூவி இந்த பேருந்து தான் முதலில் செல்லும் அது இது என்று ஏதாவது சொல்லி அந்த பேருந்தை பயணிகளால் நிறைத்து முதலாளிக்கு வருமானத்தை பெருக்கிக் கொடுத்து தனக்கு ஊதியம் வாங்கிக் கொள்வதை பார்த்திருப்போம் அல்லவா?  சரி அதை விடுங்க திருமாவளவன் பேசியதை இப்போது பார்ப்போம்.

இங்கு சிலர் மொழி அரசியல் பேசுகிறார்கள் தெலுங்கர்களை எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள். கன்னடர்களை எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள் என்னையா அரசியல் இது , என்னையா அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க (வாட் நான்சென்ஸ்). டெல்லியில் இந்தி பேசுறவன் இருக்கான் அவன் தான் தமிழ்நாட்டின் மீது அழுத்தம் கொடுக்கின்றான்,

அங்கே இருக்கும் பிராமணனால் தான் தமிழ்மொழிக்கு ஆபத்து அருகில் இருக்கும் கன்னடராளும், தெலுங்கராளுமா நமக்கு ஆபத்து என்னையா அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க என்று மறைமுகமாக சீமானை சாடினார் திருமாவளவன்.

(அப்படியே பார்த்தாலும் கூட நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் பல மாற்று மொழியினர் இருக்கிறார்கள். மாற்று மொழி தேசிய இனத்தினருக்கு தகுந்த பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதற்காக தேர்தலில் அவர்களை வேட்பாளராக சீமான் நிறுத்தி இருக்கிறார்)

அதேபோல கடந்த சில நாட்களாக திருமாவளவன் பேச்சில் அடிக்கடி பாட்டாளி மக்கள் கட்சியும் , பாரதிய ஜனதா கட்சியும் எங்கு இருக்கிறதோ அங்கு ஒருபோதும் நான் இருக்க மாட்டேன் என்று பேசி வருகிறார். இது ஒரு வகையில் திமுகவிற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் கொடுக்கப்படும் சிக்னலாக கூட இருக்கலாம் ஏனெனில் பாமக திமுகவோடு நெருங்கி வருவதையும், பாஜகவோடு திமுக பெரிய முரண்களை காட்டாமல் இருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சரி தொடக்கத்தில் நான் ஏன் அப்படி சொன்னேன் என்பதற்கான நியாயமான காரணத்தை எடுத்து வைக்க வேண்டும் அல்லவா, 2005 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் வைக்க கூடாது மீறி வைத்தால் படங்களை திரையிட விட மாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸும், திருமாவளவனும் போர்க்கொடி உயர்த்தினார்கள், இந்நிகழ்வு முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கோபமுற செய்தது அதனையடுத்து ராமதாஸ் என்கிற பெயர் என்ன தமிழ் பெயரா என்ற கேள்வியை எழுப்பினார் ஜெயலலிதா. இதற்கு பதிலளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டில் மருத்துவர்.ராமதாஸ் அவர்களை பெயர் சொல்லி பேசுவதில்லை மருத்துவர் ஐயா என்றே பேசுவோம், என்றவர் அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நாங்கள் மருத்துவர் அய்யாவை தமிழ் குடிதாங்கி என்று அழைப்போம்.

இனி பாட்டாளி மக்கள் கட்சியினரும் ஐயாவை தமிழ் குடிதாங்கி என்றே அழைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும் இந்தியாவிலேயே மொழிக்காக உயிரிழந்த வரலாறு கொண்ட ஒரே இனம் தமிழ் இனம் தான் என்றார் திருமாவளவன்.

இவரே தான் இப்போது சொல்கிறார் சீமான் இனம், மொழி என்று இனவாதம், மொழிவாதம் பேசுகிறார் என்னையா அரசியல் பண்றீங்க (what nonsense) என்கிறார்.

அதேபோல 1989 ஆம் ஆண்டு தலித் பாந்தர் அமைப்பு கட்டியமைக்கப்பட்டது, மாநில அமைப்பாளரானார் திருமாவளவன். 1991இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று பெயர் மாற்றப்பட்டது . தேர்தல் அரசியலில் பங்கேற்க மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது ஆனால் 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திருமாவளவன்.

2001 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடம்பெற்று இருந்தது என்பதும், திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று பேசியது போல வெற்றியோ, தோல்வியோ நான் தனிச்சின்னத்தில் தான் நிற்பேன் என்று திருமாவளவன் அன்று சொல்லவில்லை, தொடர்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பேன் என்று இப்போது பேசும் திருமாவளவன் அப்போது திமுக, பாஜக கூட்டணியில் இருந்தார் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக தட்டி, சீர்தூக்கி பார்க்கும் போது சீரான கொள்கை கோட்பாடுகளோடு திருமாவளவன் அரசியல் பயணம் இல்லை என்பது தெரிகிறது.

ஆனால் கட்சி ஆரம்பித்து 12 ஆண்டுகளில் சொந்த சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் நிற்காத, எதற்கும் யாரோடும் தேர்தலில் கூட்டணி சேராத நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சீண்டுவது என்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி தான் உண்மையான, அரசியல் அறிவு உள்ள சிந்தனையாளர்களுக்கு எழுகிறது.

மனிதன் என்பவன் கடந்து போகலாம் மறந்து போகக்கூடாது என்பதற்காக இனி ஒவ்வொரு மாதமும் நான் எழுதும் உங்களோடு நான் என்கின்ற பகுதி அரசியல் மாநாடு மாத இதழில் இடம் பெறும். தமிழ்நாட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

66630cookie-checkசீமான் சீற்றம் சிறுத்தைக்கு இல்லை ஓர் பார்வை
One thought on “சீமான் சீற்றம் சிறுத்தைக்கு இல்லை ஓர் பார்வை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!