மாநாடு 11 March 2024
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான வியூகங்களை அமைத்து வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருவது நாள்தோறும் தெரிகிறது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் திராவிட பாரம்பரிய இயக்கங்களே ஆளுமையில் உள்ளது இந்திய கட்சிகள் எல்லா மாநிலத்திலும் தங்களது ஆளுமையை காட்ட நினைத்து சில மாநிலங்களில் மாறுதல்களை கொண்டு வந்த போதிலும் தென்னாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் இதுவரை திராவிட கட்சிகளே தங்களது ஆளுமையை செலுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி வேர்ப்பரப்ப திட்டமிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி அதற்கான திட்டங்களை செவ்வனே செய்து வருகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் முதல் சாமானியர்கள் வரை நன்கறிவர் அதன் ஒரு பகுதியாக தான் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி படையெடுப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக அரசியல் களம் சூடு பிடித்திருப்பதையும் கட்சிகள் தேர்தலில் வெல்ல கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதையும் சில மணி நேரங்களில் கூட்டணி தலைமைகளை மாற்றிி பேசுவதையும் சீட்டு பேரும் பேசி பேசி அதற்கு கொள்கை கோட்பாடு என்று நீட்டி முழங்குவதையும் மக்கள் கவனிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் பல கட்சித் தலைவர்கள். இருந்த போதும் தற்போது திமுக கூட்டணி தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு விட்டது. எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் திமுக களம் காண போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற விட்டு திமுக தனது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலையை மும்முரமாக செய்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து சின்னம் மட்டும் வர இருக்கும் நிலையில் கட்சியின் பெயரைச் சொல்லி தனது கொள்கையை சொல்லி பரப்புரையையே தொடங்கி வட்டது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணிப் பேச்சு வார்த்தையில் சில கட்சிகளை இணைத்துள்ளது தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இப்படி அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வேலையை கட்சிக்காரர்கள் அனைவரும் செய்துவரும் சூழலில் அனைத்திந்திய அண்ணா திமுக தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சி என்கிற போதிலும் சமீப காலமாக நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியையே கண்டு வருகிறது .
ஏன் இப்படி நடக்கிறது எம்ஜிஆர் என்கின்ற இன்றும் பலராலும் இதய தெய்வம் என்று போற்றக்கூடிய தலைவர் உருவாக்கிய கட்சி அவருக்குப் பிறகு இரும்பு பெண்மணி என்று அனைவராலும் விரும்பப்பட்ட ஆளுமை ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சி
இந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து நின்று தனி பெரும் சாதனையை புரிந்த கட்சி அவரின் மறைவுக்குப் பிறகு ஏன் பலவராக பிரிவு பட்டு பிளவு பட்டு தேர்தல்களில் அடிமேல் அடிபட்டு வருகிறது என்பதை தற்போது அனைத்திந்திய அண்ணா திமுக வின் பொதுச் செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ளாமல் எவ்வளவு தான் உழைத்தாலும் ஊடகத்தின் முன் நின்று ஊடகங்கள் எங்களை காட்ட மாட்டேங்கிறது என்று உறுமினாலும் உண்மை நிலையை அவர் ஆய்வு செய்து உணராத வரை அண்ணா திமுகவின் ஆதிகால வெற்றி சமகாலத்தில் கிடைக்காது என்கிறார்கள் அதிமுகவின் அரசியல் தெரிந்த உண்மை விசுவாசிகள்.
அதிமுகவில் உள்ள சிலரிடம் இது பற்றி கேட்டபோது தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பேசத் தொடங்கினார்கள். நாங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது கொண்ட பாசத்தையும் பக்தியையும் அளவிட்டு கூற முடியாது எங்களுக்கு எங்கள் கட்சி என்றால் அவ்வளவு உயிர் யார் நிற்கிறார்கள் என்று நாங்கள் பார்த்ததே கிடையாது எங்கள் தலைமை சொல்லிவிட்டால் போதும் உடனடியாக வேலை செய்ய தொடங்கி விடுவோம் அதனால் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை திமுக திண்டாடியது எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்து வந்தது என்பது வரலாறு அதன்பிறகு எங்களை வழிநடத்த இதய தெய்வம் ஜெயலலிதா வந்தார் ஆரம்பத்தில் கட்சியின் தலைவியாக பார்த்தோம் காலம் செல்லச் செல்ல கனிவான உள்ளத்தாலும் கடுமையான, கட்டுக்கோப்பான நடவடிக்கையாலும் தாயைப்போல எங்களை வழி நடத்தியதால்
எங்களின் பாசமிகு அம்மாவானார் என்று சொன்னவர் சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்தி தனது தாடையை தடவி கொடுத்துக்கொண்டு மீண்டும் பேச தொடங்கினார் அப்போதெல்லாம் நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளையாக ஒற்றுமையோடு பயணித்து பணியாற்றிய காலம் அது மீண்டும் வருமா என்றால் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றவர் கட்சி முன்ன மாதிரி இல்லங்க அதேபோல எங்க கட்சிப் பொறுப்பாளர்களும் கூட முன்ன மாதிரி இல்லைங்க என்று விரக்தியோடு பேசியவரை இடைமறித்து தேர்தல் தேதி நெருங்குது வேட்பாளர்கள் நேர்காணல் நடக்கிறது தஞ்சாவூரில் யார் அதிமுகவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு நிறுத்தப்படுவார்கள் என்றோம் யாரை நிறுத்தினால் என்ன உங்களுக்கு தெரியாததை போல கேட்கிறீர்கள் கள நிலவரம் அறியாதவரா சார் நீங்கள் என்று பந்தை நம் பக்கம் வைத்து விட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார்..
ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்டுக்கோப்பு அண்ணா திமுகவில் இப்போது இல்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை அப்போதெல்லாம் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் கூட திமுக பொறுப்பாளர் வீட்டில் அதிமுக பொறுப்பாளர் சம்பந்தம் செய்ய மாட்டார்கள் என்ற நிலைதான் இருந்தது இன்னும் ஒரு படி மேலே போய் நினைவு கூர்ந்தால் செத்த சாவுக்கு கூட இந்த கட்சிக்காரர் வீட்டிற்கு அந்தக் கட்சிக்காரர் வரமாட்டார் என்கிற நிலை இதே தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறி இருக்கிறது சொந்தங்களே துண்டிக்கப்பட்டிருந்த நிலை மாறி ஆளும் திமுகவினரோடு பல மாவட்டங்களிலும் அதிமுகவினர் தொழில் பார்ட்னராக இருக்கிறார்கள் அரசின் டென்டர்களை திமுகவினர் அதிமுகவினருக்கு கொடுக்கிறார்கள்
அப்படி இருக்கும்போது அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று அதிமுகவினர் பழைய மாதிரி உழைக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழலால் தற்போது உள்ள அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களையோ ,ஊடக நண்பர்களையோ பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை அதிமுக பொறுப்பாளர்கள் என்பதுதான் நிதர்சனம் .இது புரியாமல் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருண்டு புரண்டாலும் கட்சி கரை சேராது.
அதிமுக கூட்டங்களே அதற்கு சாட்சியாக இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி வருகிற கூட்டங்களுக்கு எங்கிருந்தாவது ஆட்களை அள்ளிப்போட்டு கொண்டு வந்து விடுகிறார்கள் அதே சமயம் மற்ற கூட்டங்களை நடத்தும்போது அதிமுகவின் தொண்டர்கள் கூட அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது மாபெரும் பொதுக்கூட்டம் என்று சாலையின் இரு பக்கமும் வைத்திருந்த பதாகைகளில் இருந்த பெயர்களின் எண்ணிக்கையில் கூட கூட்டம் கூடவில்லை என்பதற்கு இந்த புகைப்படங்களே ஆதாரமாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் நாங்கள் தான்அதிமுக கட்சியை மீட்க போகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்
மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை மருமகன் செத்தா போதும் என்கின்ற மொழிகளுக்கு ஏற்ப தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தற்போது பிஜேபியோடு தேர்தல் கூட்டணியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எதார்த்த கள நிலவரம் இப்படி இருக்க அதிமுக நிர்வாகிகளோ அடிப்படைத் தொண்டர்களை அரவணைத்து கட்சி நடத்த வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் இல்லாமல் ஏதோ நேற்று ஆரம்பித்த புது கட்சி போல பஞ்ச பட்டு பாடி கொண்டு எடப்பாடி பழனிச்சாமி வரும்போது மட்டும் கூட்டம் கூட்டி பவுசு காட்டிக்கொண்டு
திமுகவினரோடு தொழில் பார்ட்னராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தன் சொந்த மாவட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பிரச்சனைகளை முன்னிறுத்தி எத்தனை போராட்டங்களை மாவட்ட நிர்வாகிகள் முன்னெடுத்தார்கள் ? அப்படி என்றால் தெருக்களில், நகரங்களில், தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மக்கள் சுகபோகமாக வாழ்கிறார்களா?? அதிமுக பொறுப்பில் இருப்பவர்களை மீட்டெடுத்து சரி செய்ய முடியவில்லை என்றால் இனி அதிமுக ஆட்சி அமைக்க முடியாது.
இதையெல்லாம் சரி செய்ய முடியாதா என்றால் முடியும் யார் நினைத்தால் முடியும் என்றால் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் முடியும் இதை சரி செய்யாமல் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் சாமியை கொண்டு வந்து நிறுத்தினாலும் அதிமுக வெல்லாது என்பதே கள எதார்த்தம்.
மேலும் செய்திகளுக்கு அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழை படியுங்கள்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.