Spread the love

மாநாடு 22 March 2025

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மாநில முதல்வர்களை அழைத்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன்படி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி கீழ்க்கண்டவாறு பேசினார் :


இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலமாகத் தான் கிடைத்தது. இதனை உணர்ந்து தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த மேதைகள், இந்தியாவை கூட்டாட்சி கொண்ட ஒன்றியமாக கட்டமைத்தார்கள்.
பல்வேறு காலக்கட்டங்களில் இந்த கூட்டாட்சித் தன்மைக்கு சோதனை வந்தாலும் அதனை ஜனநாயக அமைப்புகள் இயக்கங்கள் தடுத்து வந்துள்ளன. அத்தகைய சோதனை ஆபத்துதான் இப்போது வந்துள்ளது. இதனை உணர்ந்து தான் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இது வரலாற்றில் அமையப் போகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்பதை நான் அதிகம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. வரவிருக்கின்ற அல்லது எதிர்காலத்தில் நடைபெறுகின்ற “மக்கள்தொகை கணக்கெடுப்பு” (Census) அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும்.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு என்பது நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது. மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகம் இழக்க நேரிடும். அதுதான் உண்மை. இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கும். எனவே தான் இதற்கு எதிராக நாம் கடுமையாக- ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
“மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது” என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் பயனுள்ள மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களைத் தண்டிப்பதாக இந்த நடவடிக்கையானது இருக்கப் போகிறது.
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது. 2 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்று பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்குத் தேவையான நிதியைக் கூட பெறுவதற்கு போராட வேண்டி வரும்.
நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள், மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள், விவசாயிகள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது கலாச்சாரம், அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை அடையும்.
காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூக நீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தால், நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் குறைந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது.
இதனை முதலில் உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நான் கூட்டினேன். மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் மறுபகிர்வு செய்யப்பட்டால் தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும் என்பதை நான் தெளிவுபடுத்தினேன். நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை விரிவாக்கப்பட்டால், தமிழ்நாடு 12 இடங்களை இழக்க நேரிடும் இது நமது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு நேரடி அடியாகும் என்று சொன்னேன். மறுநாளே, கோயம்புத்தூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து உரையாற்றினார்.
அப்போது தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை இழக்காது என்று அப்போது கூறினார். உள்துறை அமைச்சரின் விளக்கம் தெளிவாக இல்லை குழப்பமாகத்தான் இருந்தது.
2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் மோடி அவர்கள், ”சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரசுக் கட்சி சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும் தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா என்று கேட்டார் பிரதமர்.
இதனடிப்படையில் பார்த்தால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை உணரலாம். ஒரு நாள் நாம் கூடி ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றுவதில் மட்டுமே இப்போராட்டம் முடிவடைந்துவிடாது.
உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. மத்திய அரசை வலியுறுத்துவது ஒருபக்கமும் இன்னொரு பக்கம் இது குறித்து மக்களிடம் விளக்கிட மக்கள் மத்தியில் ஒருவிழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த கூட்டு நடவடிக்கை குழு மிக அவசியம் என்றே கருதுகிறேன்.
நமது அரசியல் ரீதியான எதிர்ப்பை சட்டபூர்வமாக எப்படி நடத்துவது என்பதை பற்றி அனைவரும் ஆலோசனைகள் வழங்குங்கள் அதனை கேட்டுக்கொள்கிறேன் . அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரைவதற்காக ஒரு நிபுணர்களின் குழுவை அமைக்க நான் முன்மொழிகிறேன். ஒட்டுமொத்த முன்மொழிவு குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்று பட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும் என்று பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

76880cookie-checkதொகுதி மறு சீரமைப்பு ஏன் இப்படி கூடாது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!