மாநாடு 12 May 2025
அரசின் திட்டங்கள் என்றாலே அப்படி இப்படி ஐத்தாலக்கடி என்றுதான் இருக்கிறது என்பதை அனுபவிப்பவர்கள் அறிவார்கள், அதிலும் திமுக ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்துமே அறிவிப்பில் அழகாகவும் நடைமுறையில் அலங்கோலமாகவும் இருக்கும், இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது கலைஞர் கனவு இல்ல திட்டம்.
இந்தத் திட்டத்தைப் பற்றி திமுகவினர் மார்தட்டி மாபெரும் சாதனையாக கூறும் போது ஏழை எளிய மக்கள் குடிசைகளில் வாழ்வதை பொறுக்க முடியாமல் அனைவரும் கான்கிரீட் வீட்டில் வாழ்வதை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும் இது திமுக தலைவர் கருணாநிதியின் கனவு என்பதால் கண்ணும் கருத்துமாக கழக அரசு நிறைவேற்ற துடிக்கிறது என்று பேசுகிறார்கள் ஆனால் நிஜத்தில் நிகழ்வது என்ன என்று தெரியுமா?
கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்படும் தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இதில் 360 சதுர அடி வீடு கட்டிக் கொள்ளலாம் என்று அவர்களே ஒரு வீட்டின் அமைப்பை கொடுத்து இதன்படி கட்ட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள், ஆனால் இவர்கள் எடுத்துக் கொண்டது போக கொடுக்கும் பணத்தில் தரமாக கட்ட வேண்டும் என்றால் அனைவருக்கும் ஒரு அடுப்படியுடன் கூடிய கழிவறை மட்டுமே கட்ட முடியும் என்பதே எதார்த்தம், இவர்களுக்கு இந்தத் திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி இதனை இவ்வளவு தொகையில் முடித்து விடலாம் என்று ஆலோசனை கொடுப்பவர்களும், அந்த ஆலோசனையை அப்படியே ஏற்பவர்களும் எந்த அளவிற்கு அறிவிலிகளாக இருக்க வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், அரசின் சார்பில் கட்டப்படும் ஒரு சிறிய கட்டுமானத்திற்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கி , பதுக்கும் அரசியல்வாதிகள் ஓட்டு போட்டு உயரத்திற்கு கொண்டு வந்த சாமானிய மக்களுக்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் அலங்கோலமாக இருப்பதை எப்படி ஏற்க முடியும், இவர்களின் அறிவிப்பை நம்பி ஏழைகள் ஆண்டாண்டு காலமாக வெயிலும், மழையும் வீட்டுக்குள் வந்தாலும் வாழ்வதற்கு ஒரு நிரந்தர மண் சுவரில் கட்டப்பட்ட கட்டிடம் என்றாலும் கூட பார்த்து பார்த்து தரமாக கட்டியதை இடித்து விட்டு குடிசைகளே இல்லாமல் ஆக்குகிறோம் அனைவரையும் அழகான வீட்டில் அமர வைக்கிறோம் என்கிற ஆசை வார்த்தைக்கு ஆட்பட்டு எத்தனையோ ஏழைகள் குடிசைகளும் இல்லாமல் கூட இருப்பதை காண முடிகிறது, அப்படி என்றால் இந்த திட்டம் யாருக்கு பயன்படுகிறது என்று எண்ணும் போது அரசு அதிகாரிகள் எந்த நிறுவனங்களோடு கம்பிக்கும், சிமெண்ட்க்கும் கட்டுமான பொருட்களுக்கும் ஒப்பந்தங்கள் போட்டு இருக்கிறார்களோ அவர்கள் கொடுக்கும் கமிஷனை அரசு பதவியின் துணை கொண்டு பெறுவதற்கு சிறப்பாக பயன்பட்டு வருகிறது என்பதற்கு பல செய்திகளே உதாரணங்களாக இருக்கிறது. அதிலும் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை பார்ப்பவர்கள் முதல் கட்டிட மேற்பார்வையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் வரை ஒரே ஜாலியாக இருப்பதற்கு இந்த திட்டம் பயன்படுவதாக தெரிய வருகிறது. கட்டாத வீடுகளுக்கு கணக்கு காட்டப்பட்டு கல்லா கட்டிய கதைகளும் பல உண்டு அதேபோல வீடு கட்ட ஆசைப்பட்டு இவர்களிடம் லஞ்ச பணம் கொடுத்து மாளாமல் ஏழைகள் பாதியிலேயே வீடற்றவர்களாக நிற்கதியாக நிற்கின்ற நிகழ்வுகளும் உண்டு . பலே பலே சிறப்பு திட்டம் என்று கூறப்படும் இந்தத் திட்டத்தால் கடன்காரர்களாக ஆனவர்களும், மன அழுத்தம் வந்து நொந்து வெந்து நிற்பவர்களும் ஏராளம் இருக்க அதன் தொடர்ச்சியாக
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கலைஞர் கனவு இல்லத்திட்ட வீடுகள் கட்டும்போதே இடிந்து விழுந்த அவலம் நடந்துள்ளது.
இந்தப் பகுதியில் கலைக்கூத்தாடிகள் கோயில்களிலும், பள்ளிக்கூடங்களிலும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது இதனை ஒட்டி மாவட்ட நிர்வாகத்திடம் அந்த மக்கள் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் செஞ்சி குப்பம் கிராமத்தில் 15 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்து ஊராட்சி நிர்வாக தரப்பிலிருந்து வீடு கட்டி தர ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வெங்கடேசன் என்பவர் எடுத்து வீடுகள் கட்டும் பணிகளை செய்து வந்திருக்கிறார், புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு தண்ணீர் ஊற்றும் பணிகளை செய்த போது கட்டிடம் இடிந்து
விழுந்ததில் 3 பயனாளிகள் காயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கட்டும்போது தரமாக கட்டிக் கொடுங்கள் என்று நாங்கள் கேட்டோம் அரசு கொடுக்கும் பணத்திற்கு இவ்வளவுதான் கட்ட முடியும் இதில் தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் எங்களிடம் கூறிவிட்டார் என்று பயனாளிகள் பாவமாக சொல்கிறார்கள். அரசின் காதுகளுக்கு இதெல்லாம் கேட்குமா ? முன்னாள் முதல்வர் கலைஞர் சிரித்தால் சிறப்பாக இருக்கும். கலைஞரின் பெயரில் இதுபோல திட்டங்கள் சிரிப்பாய் சிரித்தால் நல்லவா இருக்கும் ?
இதனைத் தவிர்க்க அரசு வீடு கட்டும் திட்டத்திற்கான தொகையை அதிகப்படுத்தி கொடுத்து, மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்கள் போய் சேராதவாறு செய்யும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளை களையெடுத்து பல் இழிக்கும் திட்டத்தை பலே திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.