மாநாடு 28 February 2022
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றிகளை பெற்றது.அதேசமயம் அதிமுக அதிக இடங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது திமுகவை சேர்ந்தவர் கள்ள ஓட்டு போட்டதாக அவரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடுக்கும் நோக்கில் அவரை பிடித்து சட்டையை கழட்டி அவர்கள் ஆட்களுடன் அழைத்து வந்தார்.
இந்த சம்பவம் அன்றைய தினம் பெரும் பரபரப்பானது அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இந்த கைதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டிருந்தார்.துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இந்த கைதை கண்டித்து இருந்தார்.ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் இதுவரையில் விடுதலை செய்யப்படாமல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதை கண்டித்தது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சாலையில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இப்போது நடைபெற்றது.அதில் திமுக நடந்து முடிந்த தேர்தலில் பல முறைகளில் ஈடுபட்டதாகவும் அதன் ஒரு பகுதியாக அன்று கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திமுக அரசு பல இடங்களில் ஜனநாயகப் படுகொலை செய்து கொண்டிருப்பதாகவும்,அதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கண்டன உரையாற்றினார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களின் கூட்டம் மிகக் குறைவாக இருந்ததாக அங்கிருந்து தொண்டர்களே தெரிவித்தார்கள். மேலும் தேர்தல் முடிந்து நடைபெறுகிற முதல் கண்டன ஆர்ப்பாட்டம் இது என்பதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர்கள் குறைவாக கலந்து கொண்டதும் அதிமுகவின் கடைக்கோடி தொண்டனுக்கு ஒருவகையில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காததும் அதனால் அவரின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதுவும் கூட்டம் குறைவாக இருந்ததற்கு காரணமாக ஒரு சிலர் கூறுகிறார்கள்.