மாநாடு 20 மே 2023
தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்க கூட்டத்தின் தஞ்சைக் கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று 20~5~23 காலை 10 மணிக்கு மாவட்ட ஏ ஐ டி யூ சி அலுவலகத்தில் , மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் தி.கோவிந்தராஜன், நுகர்பொருள் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன் மற்றும் தெரு வியாபார சங்க கிளை நிர்வாகிகள் கண்ணன், பிரகாஷ், சத்யா, மஞ்சுளா, வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிர்புறமும் பூ மற்றும் வளையல், மணி உள்ளிட்ட சிறு,சிறு வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இவர்களை அங்கு வியாபாரம் செய்ய கூடாது என்று மாநகராட்சி நிர்வாகத்தால் விரட்டியடிக்கப்பட்டதுடன் அவர்கள் விற்கும் பொருட்களை தரையில் வீசி எறிந்து, மாநகராட்சி வண்டிகளில் அள்ளிச் செல்வதுமான நடவடிக்கைகள் இருந்தன. இந்த நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையில், தஞ்சை நகர காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தொடர்ந்து வியாபாரம் செய்த இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவும், வாழ்வாதாரம் பாதுகாக்கவும், தெரு வியாபார பாதுகாப்பு சட்டம் 2015,பிரிவு 3 ன் படி இவர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டி மனு அளிக்கப்பட்டது. நான்கு நாட்களாக மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து எந்த வித தொல்லையும் இல்லாத நிலையில், இன்று சனிக்கிழமை காலை திடீரென அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இங்கு பூ விற்க கூடாது, கடை போடக்கூடாது என்று அவர்களை மிரட்டி விட்டு பூக்களை அள்ளிச் சென்றுள்ளனர். மேலும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ளே பூ விற்றவர் களையும் அனுமதிக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அடாவடித்தன நடவடிக்கைகளை கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் மாநகராட்சி தெருவியாபார சட்டப்படி ஆணையர், அதிகாரிகள், ஊழியர்களுக்கு இது போன்ற அதிகாரம் இல்லாத நிலையில் தங்களது சட்டவிரோத மிரட்டல்களை கண்டித்தும் அவர்கள் விற்கும் இடத்திலேயே விற்பனை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி வருகிற மே 23ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் பூ விற்கும் போராட்டம் நடத்த ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.