மாநாடு 8 March 2022
மகளிர் தின இந்நாளில் வெறுமனே மகளிர் தின வாழ்த்துக்கள் என்று சொல்லி கடப்பதை விட ஆண் என்ற அங்கீகாரத்தை கொடுத்தவள் பெண் தான் என்பதை உணர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும். போற்றும் மனமில்லையா பரவாயில்லை.
பொருளாக போதை பொருளாக பேதையை பார்க்கும் மன நோயிலிருந்தாவது, மீள வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்கள் தடங்களைப் பதித்து விட்டார்கள்.பாதுகாப்பு பணியில் இருந்தாலும் கூட பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமே நம் பெண்கள் என்ற பதைபதைப்பு இன்றும் கொஞ்சம் அதிகமாகவே தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது வெட்கக்கேடு. ஆனால் அந்த நிலைதான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்தாலே பெண்களுக்கெதிரான வன்கொடுமை வன்புணர்வு நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது.
சுதந்திரம் பெற்றவுடன் மகாத்மா காந்தியடிகள் இந்த நாட்டில் ஒரு பெண் நட்ட நடு ராத்திரியில் கழுத்து நிறைய நகை போட்டு ரோட்டில் தன்னந்தனியே நடந்து பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறாளோ அன்றுதான் இந்த நாடு உண்மையில் சுதந்திரம் பெற்று விட்டது என்று அர்த்தம் என்றார்.
ஆனால் இன்று பட்டப்பகலில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் பெண்களுக்கு பல இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது .
வேலை பார்க்கும் இடங்களில் பல மனநோயாளிகள் ஆண்கள் என்ற போர்வையில் அற்பத்தனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒழுக்கம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களில் கூட ஆசிரியர்கள் என்னும் பெயரில் சில அயோக்கியர்கள் அட்டூழியங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே நல்ல வயிற்றில் பிறந்தவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்தான்.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் பாரதி சொன்னது போல பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மொழிக்கேற்ப இன்றுதான் பெண்கள் வெளியே வரத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துவோம். முழு மனதோடு
மாநாடு இதழின் சார்பாக உறுதியேற்போம்!
மகளிரை மதுவாக பார்க்கும் மடையர்கள் மனம் திருந்த. நல்ல சமூக நல மருத்துவம் பார்போம்!
பெண்களை பேணிக்காக்க உறுதியேற்போம் !
மகளிர் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்.-கஇராம்குமார்