மாநாடு 23 September 2022
தஞ்சாவூர் மிகவும் பாரம்பரிய மிக்க ஊர் எங்கு பஞ்சம் வந்தாலும் தஞ்சம் என்று தஞ்சைக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் ஊர் தஞ்சாவூர்.
இந்த ஊருக்கு பல்வேறு பழம் பெருமைகள் இருக்கிறது அதில் மிகவும் முக்கியமானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலக புகழ்பெற்றது இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் ஆன்மீக ரீதியாகவும், அதிசயத்தக்க பெரிய கோயிலை காண்பதற்காகவும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறான பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற பெரிய கோயிலை பராமரிக்கும் பணியை திறம்பட நிர்வாகம் செய்கிறதா என்றால் அது கேள்வி குறியாக தான் இருக்கிறது. ஏனென்றால் ஒரு கோயிலுக்கு பெயர் பலகை மிக மிக முக்கியம் ,அதனை பல கோயில்களில் அவ்வளவு சிறப்பாக வைத்திருப்பதை காண முடியும் ,ஆனால் தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெயர் பலகையை பார்த்தாலே இவர்கள் இந்த கோயிலின் மீது எவ்வளவு அக்கறை வைத்து பராமரிக்கிறார்கள் என்பது தெரியவரும்.
கோயிலுக்குள்ளும் பூசை செய்பவர்கள் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் வேலையில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள், இதனை கண்டும், கண்டிக்காமல் இருக்கிறது நிர்வாகம். இதனால் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்கள் மனசு வருத்தப்பட்டு தான் செல்கிறார்கள்.
கோயில் நிர்வாகம் இப்படி என்றால், ஆளும் கட்சிகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கண்டு பயப்படுவதாகவும், புறக்கணிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழக கோயில்களில் அன்னதான திட்டம் அறிமுகம் செய்தார் அதன்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவித்து, திட்டத்தை தொடங்கி வைத்தார், அதன்படி பல கோயில்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது,
அப்போதும் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தவில்லை, அதன் பிறகு தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுகவும் இந்தத் திட்டத்தை தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைமுறைப்படுத்தவில்லை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதாக கூறி மூன்று வேளை மூன்று கோயில்கள் திட்டம் என்பதை கடந்த ஆண்டு 16/9/2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் படி திருத்தணி, திருச்செந்தூர் ,சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் காலை 8 மணி முதல் 3 வேலையும் ,கோயிலுக்கு வருபவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இத்திட்டம் படிப்படியாக வேறு கோயில்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு முன்பாகவே பழனியிலும் ஸ்ரீரங்கத்திலும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிமுக ஆட்சியில் குறைவான கோவில்களிலேயே அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது 754 கோயில்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
இப்படி பல கோயில்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும் பாருக்கே சோறு போட்ட சோழ தேசத்தின் தஞ்சை பெரிய கோயிலில் இந்த அன்னதானத் திட்டம் இன்று வரை ஏன் செயல்படுத்தவில்லை என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது.
தமிழன் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் என்பதால் திராவிடர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இதைப் பற்றி நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் நாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நாங்கள் இது சம்பந்தமாக கோயில் நிர்வாகத்திடமும், அறநிலைய துறையிடமும் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம், அதன் பிறகும் காலம் தாழ்த்தினால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானின் வழிகாட்டுதலில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்றார்.
மேலும் பல்வேறு அமைப்புகளிடமும் நாம் பேசிய போது அவர்களும் இதனை வலியுறுத்த போவதாக கூறியிருக்கிறார்கள், இதன் மூலமோ, இதற்கு முன்பாகவோ, எப்படியோ விரைவில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். விருப்பத்தை விட்டு வைக்காமல் நிறைவேற்றுமா தமிழக அரசு.
வீடியோ லிங்க்: https://youtu.be/dPxdC3xOAtQ