மாநாடு 3 August 2022
தொழில் வளர்ச்சிக்காக நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பதாக தமிழக அரசு கூறிக் கொள்கிறது, இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக ஆளும் அரசால் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் உயிர் தொழிலை செய்யும் விவசாயிகளின் நிலைமை தொடர்ந்து போராட்டமாகவே தான் இருக்கிறது, வெல்லாமை செய்து அந்த நெல்லை அரும்பாடு பட்டு அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்தில் வந்து சேர்ப்பது என்பது கருவில் உருவான குழந்தையை தாய் ஈன்றெடுப்பதற்கு சமமான செயலாக இருக்கிறது, அவ்வாறு அறுவடை செய்து கொண்டு வந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேர்த்த நெல் 1000 டன் அளவில் ஆன நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்திருக்கிறது விளைவித்த விவசாயிகளின் வயிறு எரிகிறது .
தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மிகப்பெரிய நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு மதுரை அருகியுள்ள தோப்பூரில் உள்ளது, இங்கு சுற்று வட்டார பகுதியில் விளையும் நெல்களை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம், அது மட்டுமல்லாமல் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், பல மாவட்டங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகளையும் இங்கு அனுப்பி சேமித்து வைப்பார்களாமா, அந்த அளவிற்கு தோப்பூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு மிகப்பெரியது என்று கூறப்படுகிறது,
இந்த சேமிப்பு கிடங்கை சரியாக பராமரிப்பது இல்லை என்று கூறப்படுகிறது, இங்கு வரும் நெல் மூட்டைகளை ஒரு பகுதிக்கு மேல் வெளியே திறந்தவெளி மைதானத்தில் தான் அடுக்கி வைப்பார்களாம், அந்த நெல் மூட்டைகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து கொண்டே இருக்குமாம், அவ்வாறாக சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழையில் வெளி மைதானத்தில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருக்கிறது, அதுவரை அலட்சியமாக இருந்த அதிகாரிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தவுடன் தார்பாய்களை வைத்து மூடி இருக்கிறார்கள். அதற்குள்ளாக நெல் மூட்டைகளில் இருந்த நெல் முளைக்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்றும் எடை ஏறக்குறைய 1000 டன் என்று சொல்லப்படுகிறது,
குடிகெடுக்கும் பீரை பாதுகாப்பதற்காக பாதுகாப்பான கிடங்கு அமைத்து பாதுகாக்கும் தமிழக அரசு, குடி வாழ சோறு போடும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்பான, முறையான சேமிப்பு கிடங்குகளை அமைத்து காக்க கவனம் செலுத்தாததன் காரணமாக தற்போது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் 1000 டன் அளவில் மதுரை தோப்பூரில் உள்ள கிடங்கில் வீணாகியுள்ளது.
பேனா வைக்க 81 கோடி ரூபாய் செலவு செய்ய நினைப்பவர்கள் வீணாய் போகாமல் நெல்மணிகளையும் விவசாயிகளையும் காப்பார்களா காத்திருந்து பார்ப்போம்.