மாநாடு 27 September 2022
காலம் எப்பொழுதுமே மனிதர்களுக்கு கடினமான காலங்களை கொடுத்து அதிலிருந்து பாடம் படித்து, கற்று, தெரிந்து ,தெளிந்து வாழுங்கள் என்கின்ற படிப்பினையை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.
மரண பயத்தை கூட கொடுத்து, மனம் திருந்தி வாழுங்கள் என்கின்ற படிப்பினையை கொடுத்துக் கொண்டே இருக்கிறது, ஏனோ சிலர் மனம் அதை ஏற்க மறுத்து, மறந்து சீர் கெட்டு திரிகிறது.
கையில் காசு இருந்த போதும், காய்கறிகள் கிடைக்கவில்லை, கடைகள் திறக்கவில்லை, மூச்சுக்காற்று கிடைக்கவில்லை என்கின்ற அவல நிலையில் கொரோனா காலத்தில் வாழ்ந்து வந்த இந்த மனிதர்கள் ஏனோ தெரியவில்லை , அந்நிலையை மறந்து தற்போது காசை மட்டுமே சேர்க்க நினைத்து மீண்டும் மானிட குலத்திற்கு தீங்கு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இதனை எல்லாம் தடுக்க வேண்டிய அரசும், அரசின் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், வெறும் விளம்பரங்கள் மட்டும் செய்து கொண்டிருப்பதும், சில இடங்களில் அரசின் அதிகாரிகளே இவ்வாறான சீர்கேடுகளை கண்டும் காணாமலும் இருப்பது என்பது மிகப்பெரிய கேவலம்.
அதுபோல நிகழ்வு தான் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நடந்து வந்தாலும் கூட தஞ்சாவூரில் இன்னும் வேகமாக நடந்து வருகிறது, தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு தொகையும் கொடுக்கப்பட்டது. ஆனால் பரிசை பெற்று வந்த அதிகாரிகளும், மாநகராட்சியும் அதன் மேன்மையை காத்ததா காப்பாற்றி வருகிறதா?
மாநகராட்சியில் தீர்மானம் போட்டு, பத்திரிக்கையில் செய்திகள் கொடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சியில் பல லட்சம் மரங்கள் நடத்திட்டம் என்று செய்திகள் வெளியிடப்பட்டது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் தஞ்சாவூர் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக இருந்த பெரிய மரங்களை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் மாலை நேரங்களில் அந்தப் பக்கம் சென்றால் பறவைகளின் சத்தம் அவ்வளவு இனிமையாக இருக்கும் ,ஆனால் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடம் தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த மரங்களை வெட்டியதாக தெரிய வருகிறது.இங்கு மட்டுமல்லாமல் வளர்ச்சி என்கிற பெயரில் தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக இருந்த பெரிய பெரிய மரங்கள் தொடர்ந்து வெட்டி வீழ்த்தப்படுகிறது.
அதன்படி இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள விஜயா திரையரங்கம் எதிர்புறத்தில் சாலை ஓரமாக இருந்த பெரிய மரத்தை வெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள், அதனை கண்டு நாம் அவர்களிடம் சென்று ஏன் இந்த மரத்தை வெட்டுகிறீர்கள், யார் வெட்ட சொன்னது என்று கேட்டோம், அதற்கு அவர்கள் ஏன் என்று எங்களுக்கு தெரியாது சார் என்றார்கள்.சரிங்க யார் வெட்ட சொன்னது என்று கேட்டோம், மாநகராட்சி ஆபீஸ்ல சொன்னாங்க சார் என்றார் அந்த கூலித்தொழிலாளி.
நாம் பார்த்த நேரத்தில் அந்த மரம் முழுவதுமாக வெட்டப்பட்டு இருந்தது ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் அங்கிருந்து வந்து சில வழக்கறிஞர்களிடம் இதைப் பற்றி முறையிட்டோம். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி தஞ்சாவூரில் இருக்கின்ற மரங்களைக் காக்கும் அடுத்த கட்ட வேலையில் இறங்க ஒரு குழு அமைத்து சட்டப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஏனென்றால் கொரோனா பெருந்தொற்றின் கொடிய காலத்தை மறந்து கடந்து விட கூடாது. அந்த நேரத்தில் பல ஊர்களில் ,பசும் இலைகள், வேப்பிலைகள், போன்றவற்றை விலை கொடுத்து வாங்கி நமது மூச்சுக்காற்றை சுத்தப்படுத்துவதற்காக மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
மருத்துவமனைகள் பிதுங்கி ,வழிந்து கொண்டிருந்தது, பலரின் மூச்சு மூச்சுக்காற்று இல்லாமல் நின்று போனது.இது எல்லாம் நடந்து பல நூற்றாண்டுகள் ஆகவில்லை. நம் கண் முன்னே நடந்தது இருந்த போதும் இதையெல்லாம் மறந்து, மனிதனுக்கு மூச்சுக்காற்றை கொடுக்கின்ற மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாக யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல தெருக்களில் சாலைகளை போடுவதில்லை அப்படி சில இடங்களில் சாலைகள் போடப்பட்டாலும் அச்சாலைகள் தரமானதாக போடப்படுகிறதா அதாவது தமிழக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் குறிப்பிடப்பட்டது போல சாலைகளை நன்கு சுரண்டி விட்டு பழைய சாலை இருந்த அளவே தரமானதாக முறையாக போடப்படுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே தெரிகிறது ஏனென்றால் பழைய சாலையை விட இப்போது போடப்படும் சாலை ஏறக்குறைய அரை அடி உயரம் கூடுதலாக இருக்கிறது.
அந்த வேலையை முறையாக ,சரியாக வேலை செய்து சாலைகளை போட்டு மக்களிடம் நற்பெயரை வாங்க வேண்டிய மக்கள் ஊழியர்கள்.அதனை முறையாக செய்யாமல், மரங்களை வெட்டி வீழ்த்தி மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான மூச்சுக்காற்றை அழிக்கும் வேளையில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.