மாநாடு 29 September 2022
வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் சில கட்டுப்பாடுகளோடு ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்டோபர் 2ஆம் தேதி சமய நல்லிணக்க பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்த போவதாக அறிவித்தார் இதற்கு அனைத்து கட்சிகளையும் ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் கட்சியும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் என்று அறிவித்தார், அதேபோல இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்தார்கள்.
செப்டம்பர் 27ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அனுமதியை மறுத்திருந்தார், அனுமதி கோரி இருந்த கார்த்திகேயன் என்பவர் தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் விசிக சார்பில் திருமாவளவன் மத நல்லிணக்க மனித சங்கிலிக்கு அழைப்பு விடுத்திருந்ததையொட்டி பல்வேறு கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்து பங்கேற்பதாக கூறிவந்த நிலையில், திமுகவும், காங்கிரசும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கும, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்திருந்த மத நல்லிணக்க மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலில் சட்டம், ஒழுங்கை எந்த நிகழ்வும் சீர்குலைத்து விட வாய்ப்பு அளித்து விடக்கூடாது என்ற காரணத்தால் அக்டோபர் 2ஆம் தேதி எந்த அமைப்புகளுக்கும், ஊர்வலமும் , எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.