மாநாடு 05 November 2022
தஞ்சாவூரின் முக்கிய வீதிகளில் முதன்மையானதும் மக்கள் நடமாட்டம் எப்போதுமே அதிகம் இருப்பதுமான பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை செல்லும் கீழ ராஜவீதியில் திவ்யா ஸ்வீட் அருகில் இருந்த பழமையான கட்டிடம் நேற்று இரவு ஏறக்குறைய 12 மணி வாக்கில் இடிந்து விழுந்திருக்கிறது, இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் கடையும், டைலர் கடையும் சமீபத்தில் தான் காலி செய்யப்பட்டதாகவும், அதன் பொருட்கள் இந்த கட்டிடத்தின் உள்ளே தான் இருந்ததாகவும் தெரிய வருகிறது,
ஏறக்குறைய 1 ஆண்டுகளுக்கு மேல் அதனை சுற்றி உள்ள வீதிகளிலும் தெற்கு வீதி போன்ற பல வீதிகளிலும் இந்த வீதியிலும் நல்ல நிலையில் இருந்த பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, சாக்கடைகள் உடைக்கப்பட்டு அதன் கழிவு நீர்கள் சாலைகளில் ஓடியதும், நோய் பரப்பும் நிலையில் இருந்ததையும், இப்போதும் பல இடங்கள் அப்படியே இருப்பதையும், பெரும்பாலான மக்கள் அறிவார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு கீழ ராஜ வீதியில் உள்ள சாக்கடையை சீரமைக்கும் பணிக்காக பொக்லின் என்கிற கனரக வாகனத்தை பயன்படுத்தி வேலை பார்த்துக் கொண்டிருதிருக்கிறார்கள், வேலை நடந்து கொண்டிருந்த போது இந்த பழமையான கட்டிடம் இடிந்து சரிந்து விழுந்து இருக்கிறது, இக்கட்டிடத்தின் அருகில் இருந்த மின்கம்பமும் சாய்ந்திருக்கிறது,
எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான இந்த கீழ ராஜ வீதியில் இக்கட்டிடம் இரவில் இடிந்து விழுந்ததால் ,உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதும் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தஞ்சாவூர் மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்ததை கிழக்கு காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள், அதனடிப்படையில் விரைந்து வந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்கள்,
இங்கு மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட, மக்கள் கூடுகின்ற பல முக்கிய சாலைகளில் பழமையான, வலுவிழந்த கட்டிடங்கள் அதிகமாக இருக்கிறது, அதனை சுட்டிக்காட்டும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் பர்மா பஜாரில் இருந்த கட்டிடம் பெயர்ந்து விழுந்ததை சுட்டிக்காட்டி நமது மாநாடு இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. பர்மா பஜாரில் சாலை போடும் பணியின் போது வலுவிழந்த கட்டிடங்கள் இருக்கின்ற காரணத்தால் தான் கனரக இயந்திரத்தைக் கொண்டு அழுத்தமாக தரையைத் தட்டி சாலை போடுவது இல்லையாம்.
இந்நிலையில் பர்மா பஜார் பகுதியில் விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக செய்திகள் பரவியுள்ளது ஒருவேளை அப்படி பணிகள் தொடங்கினால் இங்குள்ள கட்டிடங்களின் உறுதித் தன்மை அப்போது தெரியும். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக தஞ்சாவூர் மாநகராட்சி ஆய்வுகள் செய்ய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.
மாநாடு இதழில் வெளியிட்டிருந்த செய்தி லிங்க் இதோ : https://maanaadu.in/thanjavur-burma-bazar/