மாநாடு 07 February 2023
ஆசிரியர் தகுதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வாளர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அதன் விவரம் பின்வருமாறு;
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, வருகிற 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு நேற்று தேர்வு எழுத வந்த தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி திடீரென மாற்றப்பட்டிருப்பதாக கூறி தேர்வு எழுத வந்த 15 க்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கவில்லை, இது போல பல தேர்வு மையங்களிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேர்வாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதும் நாள் மாற்றம் குழப்பத்தால் பாதிக்கப்பட்டு பரிதிவிக்கப்பட்ட 15 க்கு மேற்பட்டவர்கள் அங்கு திடீரென போராடத் தொடங்கினர் இதனை அடுத்து தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து கீழ்க்கண்டவாறு பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி கொடுத்தார்.
அதாவது இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்றும் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியவர், நீங்கள் பரிட்சை உறுதியாக எழுதலாம் அதற்கு நான் பொறுப்பு, நான் வரும்போது அனைத்தையும் பேசிவிட்டு தான் வந்திருக்கிறேன் நீங்கள் படிக்கின்ற வேலையை பாருங்கள் பரிட்சை நடக்கும் என்று உறுதியளித்தார். அப்போது அவர் பேசப்பேச பக்கத்தில் இருந்தவர் சார் யார் தெரியுமா இவர்தான் சிஇஓ மாவட்டத்தில் பெரிய அதிகாரி என்று ஏதோ விளையாட்டுப் போட்டியில் வர்ணனை செய்வது போல கூறிக் கொண்டிருந்தார், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 14ஆம் தேதி எங்களை பரீட்சை எழுத அனுமதித்தால் ஏற்கனவே பரீட்சை எழுத அனுமதித்தவர்கள் ஆப்சென்ட் ஆவாங்களே என்று அக்கறையோடு கேள்வி எழுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் சும்மா கம்ப்யூட்டர் தானே அதை மாத்திக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
கம்ப்யூட்டரில் மாற்றலாம் என்றவர் கடிதம் எழுதி தர சொல்லி ஏன் கேட்கிறார் என்கிற கேள்வியோடு அவர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோவையும், தேர்வு எழுத வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டையும் சமூக ஆர்வலர்களிடம் நாம் காட்டி ஏன் இப்படி ஆகியது என்றோம் அதற்கு அவர்கள் கூறியதாவது: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் சொல்லுக்கேற்ப இப்போது தான் பெண்கள் படித்து வெளிவர, வாழ்க்கையில் உயர்வு பெற தொடங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இது போன்ற அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இங்கு பேசிய ஒருவர் கூறியது போல வெளியூரில் வெகு தூரத்தில் பல மாவட்டங்கள் கடந்து பரீட்சை எழுத வேண்டி இருந்தால் போக முடியாதவர்கள் கூட பல பிரச்சனைகளுக்கு இடையில் எப்படியாவது நாம் இந்த பரிட்சை எழுதி விட வேண்டும் என்று பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து அதி காலையிலேயே வந்து பரீட்சை எழுத முயற்சித்த போது, அவர்களின் முயற்சியை முறியடிக்கும் விதமாக இவர்கள் செய்த குளறுபடியால் பரீட்சை எழுத வந்தவர்கள் பரிதவித்து நிற்கிறார்கள்,
இந்த போக்கை பார்க்கின்ற போது இந்த துறைக்கு அமைச்சர் இருக்கிறாரா அந்த அமைச்சருக்கு இந்த அதிகாரிகள் கீழ்ப்படிந்து சரியாக முறையாக தங்களது பணிகளை செய்கிறார்களா என்கின்ற கேள்வி எழுகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேசும்போது கம்ப்யூட்டரில் இதையெல்லாம் சரி செய்து விடலாம் யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறியதை வைத்து பார்த்தால், ஏற்கனவே இவ்வாறான பரிட்சைகளில் யார் வெல்ல வேண்டும் என்று கம்ப்யூட்டரில் இவர்கள் மாற்றி இருக்கவும், மாற்றவும் வாய்ப்பு இருப்பதாகவே என்ன தோன்றுகிறது,
அதேபோல தேர்வு எழுத வந்தவர்கள் ஹால் டிக்கெட்டில் டேட் ஆப் எக்ஸாமினேஷன் என்கிற இடத்தில் -06/02/2023 என்று எழுதி இருக்கிறது, ரிப்போர்ட்டிங் டைம் என்கிற இடத்தில் -7:30am என்று எழுதியிருக்கிறது, கேட் குலோசிங் டைம் என்கிற இடத்தில் -8:15 am என்று எழுதி இருக்கிறது, எக்ஸாமினேஷன் டைமிங்ஸ் என்கிற இடத்தில்-9am-12pm என்று எழுதி இருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் இதைக் கவனமாக படித்து கடைப்பிடிக்க வேண்டியது என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளபடி 6ம் எண்ணில் வாரியத்தின் கொள்கைப்படி
தேர்வு மையத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும், எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்க படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகிறவர்கள் தங்களது பொறுப்புணர்ந்து இனியாவது தகுதியோடு நடந்து கொள்ள வேண்டும். குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி ஒரு முறை இதுபோல நடக்காமல் தடுக்க வேண்டும்.
தகுதியோடு நடப்பார்களா? தவறுகளை தடுப்பார்களா? வரும் காலங்களில் பார்ப்போம்.