மாநாடு 1 April 2022
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரின் கணவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரம் 51 வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனா கணவர் ஜெகதீசன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராயபுரம் ஜே.பி கோவில் தெருவில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தியாகராஜன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இரவு நேரத்தில் கும்பலாக நிற்பது குறித்து விசாரித்தனர். அப்போது நாங்கள் மட்டும் நிற்கவில்லை எங்கள் கூட கவுன்சிலரும் இருக்கிறார் என்று ஒருவர் சொல்ல இந்த பகுதிக்கு பெண்தானே கவுன்சிலர் இங்கு நிற்பதில் யார் கவுன்சிலர் என்று காவலர் கேட்க ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் ஜெகதீசன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் காவல்துறையினரை ஆபாசமாக தகாத வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை காவல்துறையினர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. அத்துடன் இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் தியாகராஜன் இதுகுறித்து புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 141- சட்டவிரோதமாக கூடுதல்,
294(பி)- ஆபாசமாக திட்டுதல்,
353- வன்முறை செயலால் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்,
506(1)- கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராயபுரம் கிழக்கு பகுதி 51வது வார்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக நிர்வாகி ஜெகதீசன் மீது புகார் எழுந்த நிலையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். பெண்களுக்கு இட ஒதிக்கீடு கொடுத்து அவர்களும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றவுடன் திமுக பெண் கவுன்சிலர்களின் உறவினர்களும், கணவர்களும் மாமூல் கேட்டும் காவலர்களை மிரட்டியும் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபடுவது பொதுமக்களிடையே திமுக மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.