மாநாடு 1 July 2022
திமுகவில் முன்பெல்லாம் உட்கட் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது திமுகவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என்று மனம் நொந்து பேசினார் திமுகவின் முக்கிய தொண்டர் ஒருவர்.
அவரிடம் என்ன நடந்தது எதற்காக இப்படி பேசுகிறீர்கள் என்று பேச்சு கொடுத்தோம் அவர் கீழ்க்கண்டவாறு கூறினார்: திமுகவில் பொறுப்புகளை தேர்தல் நடத்தி அறிவிப்பது வழக்கம் அந்த தேர்தல்களில் யாருக்கு அதிகமாக வாக்கு இருக்கிறதோ அவர்கள் வென்றதாக அறிவித்து பதவிகள் வழங்கப்படும். அதன்படி இந்த முறையும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது, அதில் மத்திய மாவட்ட வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு ஜெயராஜ் என்பவரும், முரசொலி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள். கடந்த ஜூன் 29ஆம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது, இந்த தேர்தலின் ஆணையராக மதுரை குழந்தை வேல் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் நாளன்று மாலை தேர்தலை நடத்தாமல் முரசொலி என்பவர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்று அறிவிக்கப்பட்டது, அதனையொட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த ஜெயராஜ் என்பவர் எப்படி தேர்தல் நடத்தாமல் நேரடியாக முரசொலி வடக்கு ஒன்றிய செயலாளர் என்று அறிவிக்கலாம் எனக் கேட்டார்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது, முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம் வந்து தலைமை தேர்தலை நடத்தி பொறுப்பாளர்களை அறிவிக்க சொல்லி இருக்கும்போது ஏன் தன்னிச்சையாக இப்படி அறிவிக்கிறீர்கள் என்று கேட்டார், அவரையும் முரசொலி ஆதரவாளர்கள் தகாத வார்த்தையில் பேசினார்கள் உடனே வெளியேறி பழனிமாணிக்கம் தனது மகிழுந்தில் ஏறினார் அவரது காரையும் தாக்கினார்கள்.
அவர் காரில் இருந்து இறங்க முற்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் அவரை இறங்கவிடாமல் வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர் இதனை ஏற்று அவர் வீட்டிற்கு சென்றார். பிறகு அவரது ஆதரவாளர்கள் கலைஞர் அறிவாலத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது, காவலர்களும் வந்து சேர்ந்தார்கள். ஏறக்குறைய 1.30 மணி நேரம் பரபரப்பாகவே கலைஞர் அறிவாலயம் இருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு போராட்டத்தை கைவிடுங்கள், தலைமை சொல்லியதையும் மீறி அவர்கள் தேர்தலை நடத்தாமல் தன்னிச்சையாக ஒன்றிய செயலாளரை நியமிக்கிறார்கள், இதனை ஸ்டாலினிடம் கொண்டு செல்வோம் நீங்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் ,அதன் பிறகு கலைந்து சென்றார்கள் இது எங்களை மாதிரி திமுகவின் உண்மை தொண்டர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது என்றார்.
அந்த நிகழ்வு நடந்த போது அங்கு இருந்த திமுகவின் நிர்வாகி ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டோம் அவர் கூறியதாவது: திமுகவின் உட்கட்சித் தேர்தலில் தஞ்சை மத்திய வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு ஜெயராஜ் என்பவரும் முரசொலி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள் .தேர்தல் நாளன்று மாலை 6 மணி அளவில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது அந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயரை சொல்லி அழைத்தார் அந்த நேரத்தில் ஜெயராஜ் என்பவர் அங்கு இல்லை சிறிது நேரம் அழைத்து பார்த்துவிட்டு ஆள் வரவில்லை என்று தெரிந்தவுடன் முரசொலியை தஞ்சாவூர் மத்திய வடக்கு ஒன்றிய செயலாளராக அறிவித்தார்கள், 7 மணியளவில் வந்த ஜெயராஜ் தேர்தல் நடத்தாமல் எப்படி அவரை ஒன்றிய செயலாளர் என்று அறிவித்தீர்கள் என்று கேட்டதால் இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது என்றார். கூடுதலாக பெருவாரியான ஆதரவாளர்கள் முரசொலிக்கு இருந்ததாகவும் கூறினார்.
திமுகவின் முன்னோடி உடன்பிறப்புகள் இந்நிகழ்வு பற்றி கூறும் போது திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது, இப்போது இருக்கிற நிலை எல்லாம் இருந்திருந்தால் எங்கள் தலைவர் கருணாநிதி திமுகவின் தலைவராகவே ஆகியிருக்க முடியாது, மேலும் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை கட்சியின் தலைவராக அடுத்து சிறிது காலத்தில் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது, அதற்கு சீனியர்கள் யாரும் இடையூறாக இருந்து விடக் கூடாது என்பதற்காக கட்சியில் உழைத்த சீனியர்களை ஓரங்கட்டும் வேலைகள் தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது ஆனால் இது கட்சிக்கு நல்லதல்ல என்கிறார்கள்.