Spread the love

மாநாடு 14 February 2024

தேர்தல் வந்தாலே நமக்கு ஏதாவது மாறுதல் வர வேண்டும் என்று மக்கள் நினைப்பதும். நடைபெற இருக்கிற தேர்தலில் நமது  கட்சியில் சீட்டு வாங்கி நமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி  வெற்றியோ தோல்வியோ கெத்து காட்ட வேண்டும் என்று அரசியல்வாதிகளும் நினைப்பது தற்காலத்தில் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலின் தேதி அறிவிக்க இருப்பதை அடுத்து யாருக்கு சீட்டு சீட்டுக்கு எவ்வளவு நோட்டு என்ற பேச்சு வார்த்தைகளை கட்சிகள் நடத்தி வருவதை மக்கள் உற்று நோக்கி வரும் நிலையில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு எகிரி வருகிறது.

1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் அதிக முறை அதாவது 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திமுக 8 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக 2 முறை வெற்றி பெற்று இருக்கிறது. அதன்படி பார்க்கும் போது விரைவில் வர இருக்கிற பாராளுமன்றத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை கட்சியினரிடையே உண்டு பண்ணி இருக்கிறது.

பல கட்சிகள் தேசியக் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் இருந்தாலும் மாநில கட்சிகளான அதிமுக, திமுகவே அனைத்து தேர்தலிலும் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக  தனது செல்வாக்கை தமிழ்நாட்டில் நிறுவி நிலைநாட்டி வருகிறது அது மட்டுமல்லாமல் பல நேரங்களில் இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலையையும் வந்த பின்னும் அது நிலைக்க வேண்டுமா என்ற நிலையையும் தனது செல்வாக்கால் நிலை நிறுத்தி காட்டியும் நிரூபித்திருக்கிறது. அவ்வாறான இரு பெரும் கட்சிகளான அதிமுகவிலும் திமுகவிலும் வேட்பாளர்களின் பெயர் வாங்கினாலே வேட்பாளர்களின் பட்டியலில் தனது பெயர் வந்தாலே பெரும் மதிப்பாகவும் தனக்கு கிடைத்த மாபெரும் மரியாதையாகவும் அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது அவ்வாறான நிலையில் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு திமுகவின் சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது இந்த நிலையில் தஞ்சாவூரில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் ரேசில் முந்தி வருவது யார்? யாருக்கு சீட்டு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்ப்போம்.

எம்.ராமச்சந்திரன் முன்னாள் திமுக எம்எல்ஏ.(தலைமை செயற்குழு உறுப்பினர்)

எஸ்.எஸ்‌பழனி மாணிக்கம் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ( உயர்மட்ட குழு உறுப்பினர்)

கே.டி‌மகேஷ் கிருஷ்ணசாமி முன்னாள் எம்எல்ஏ.(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

வடுவூர் பந்தல் சிவா.

சண். ராமநாதன் தற்போதைய தஞ்சாவூர் மாநகர மேயர், திமுக மாநகரச் செயலாளர் ( இளைஞர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ) 

டாக்டர் அஞ்சுகம் பூபதி தஞ்சாவூர் மாநகர துணை மேயர்.

சோழராஜன் மன்னார்குடி நகர் மன்ற தலைவர்.

முரசொலி தஞ்சாவூர் மத்திய ஒன்றிய செயலாளர் உள்ளிட்டவர்களும்

இன்னும் சிலரும் தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் பட்டியல் ரேசில் இருக்கிறார்கள். இதில் முதலில் உள்ள ஐவருக்கே அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது அவர்களைப் பற்றி பார்ப்போம்.

ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த எம். ராமச்சந்திரன் திமுகவின் சார்பில் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் 3 முறை வெற்றியும் 3 முறை தோல்வியும் அடைந்திருக்கிறார். அப்போது திருவோணம் சட்டமன்ற தொகுதியாக இருந்த போது 1989 ஆம் ஆண்டு 1996 ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறார் அதேபோல ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு 2001 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருக்கிறார். இருந்த போதும் தேர்தல் அரசியலை மீறி அனைத்து தரப்பு மக்களிடமும் நற்பெயரை பெற்றவராக வலம் வருகிறார் தற்போது உள்ள சூழலில் தனக்கு அல்லது தனது மகனுக்காவது பாராளுமன்ற வேட்பாளர் சீட்டை பெற வேண்டும் என்கின்ற போட்டியில் இருக்கிறாராம்.

எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் இவர் பாராளுமன்ற தேர்தலில் 9 முறை போட்டியிட்டதில் 6 முறை வெற்றி பெற்று தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அதன்படி 1996 ஆம் ஆண்டு 1998 ஆம் ஆண்டு 1999 ஆம் ஆண்டு 2004 ஆம் ஆண்டு 2009 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டு என 6 முறை வெற்றியும், 1984 ஆம் ஆண்டு 1989 ஆம் ஆண்டு 1991 ஆம் ஆண்டு என 3 தேர்தல்களில் தோல்வியும் அடைந்தவர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் சமீபத்தில் பெரும் தொற்றாக மக்களை அச்சுறுத்திய கொரோனா சமயத்தில் மத்திய அரசிடம் இருந்து கொரோனா நிவாரண நிதி 5 கோடி ரூபாயை முதலில் பெற்று தந்த பாராளுமன்ற உறுப்பினர் இவர்தான் என்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் இவர் என்று கூறப்படுகிறது. இருந்த போதும் மக்களுக்கும் இவருக்குமான தொடர்பு அவ்வளவு சுமுகமாக இல்லை என்றும் இவரை சந்திக்க வேண்டும் என்றால் அலுவலகம் கூட இல்லை என்கிற நிலையில் அவரது வீட்டிற்கு தான் சென்று சந்திக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது இதனால் பட்டுக்கோட்டை உள்ளிட்ட தொலைதூரத்தில் இருக்கும ஊர்களில் இருந்து மக்கள் வந்து சந்திப்பது என்பது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் நேரில் சந்திக்கும் மக்களின் குறைகளை அவர் இருக்கும் போது கேட்டறிந்து களைவதாக கூறப்படுகிறது இவரும் திமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ரேசில் இருப்பதாக தெரிய வருகிறது.

கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் குணத்தில் நல்லவர் என்றும் அதே சமயத்தில் கோபக்காரர் என்றும் இவரின் கோபத்தால் அரசு அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் இவர் மீது கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பரபரப்பு நிகழ்வுகளும் நடைபெற்று செய்திகளாக வந்திருக்கிறது என்கிறார்கள் கட்சிக்காரர்களிடம் நன்கு நட்பு பாராட்டக் கூடியவராம். வருகிற பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் ரேசில் இவருக்கு கொஞ்சம் கூடுதலாக வாய்ப்பு இருப்பதாகவே கூறுகிறார்கள்.

பந்தல் சிவா திமுக தலைமையிடம் மிகவும் நெருக்கமானவர் இவரை நேரம் வரும்போது அரசியலில் பயன்படுத்திக் கொள்வோம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் மகள் டாக்டர். சிவ.நந்தினி வரவேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை நினைவு கூறி இவரைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டி இவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் சீட்டு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சண். ராமநாதன் தற்போது தஞ்சை மாநகர மேயராக இருப்பவர். ஒரு நாள் தவறாமல் ஒவ்வொரு நாளும் மேயர் அலுவலகத்தில் காலை, மாலை என இரு வேலையும் கட்சிப் பாகுபாடு இன்றி தனது அலுவலகத்திற்கு வரும் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். தன்னிடம் வேலை கேட்டு வருபவர்களின் மனுக்களைப் பெறுகிறார் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாத இறுதி நாளில் அவர்களுக்கான வேலையையும் ஏற்பாடு செய்து தருகிறார். மேயர் அலுவலகத்தில் வருபவர்களை சந்தித்த பிறகு கட்சியினரை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். அதன்படி பார்க்கும் போது தஞ்சாவூர் திமுகவில் மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் , கட்சியில் உள்ள இளைஞர்களிடமும் அதிக நெருக்கத்தில் உள்ளவராக சண். ராமநாதன் அறியப்படுகிறார் மேலும் திமுக தலைமையிடமும் , திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடமும் அன்பைப் பெற்றவராக இருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக இளைஞரணிக்கு 5 இடங்களை கேட்டு பெரும் திட்டத்தில் இருப்பதாகவும், அதற்கான வேட்பாளர் பெயர்களையும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதில் சண்.ராமநாதன் பெயர் இருப்பதாகவும் தகவல்கள் கசிகிறது. இவர் கடந்த மார்ச் மாதம் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூரில் 45 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் பிறகு நடைபெற்ற மேயர் தேர்தலிலும் 39 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று தற்போது தஞ்சாவூர் மாநகர மேயராக இருக்கிறார் என்பதும் சமீபத்தில் தான் இளைஞர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய பெயரில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் கட்சியில் பலரும் திமுக சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக களம் காண ஆர்வம் காட்டி வருகிறார்கள் இன்னும் சில நாட்களில் யார் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார்கள் என்பது தெரியவரும் யாராக இருந்தாலும் பாருக்கு உழைத்தால் நல்லது தானே..

73010cookie-checkதஞ்சாவூர் திமுகவில் எம்பி சீட் யாருக்கு ? ரேசில் முந்துவது யார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!