Spread the love

மாநாடு 26 January 2023

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள தலைவர்களில் சிலரை மட்டுமே கட்சியைத் தாண்டியும் அனைவரும் நேசிப்பார்கள். அப்படி அனைவராலும் நேசிக்கப்படக்கூடியவர் தான் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா. இவர் நேற்று கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்திய பிறகு சிறப்புரையாற்றினார் .

தமிழ்நாட்டிற்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது , தமிழ் மொழிக்கு தனித்த அடையாளம் இருக்கிறது என்று பேசத் தொடங்கியவர் எங்களை தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள் என்று நான் சொன்னால் டெல்லி வரை அலறுகிறது, ராசாவை கைது செய்யுங்கள் ராசா தீவிரவாதி எனக் கூறுகின்றார்கள் , ஆனால் தமிழகம் வருகை தந்த ஜே.பி.நட்டா நீலகிரியில் பேசும் போது இந்தியா முழுக்க ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் இருக்கிறது , ஆனால் தமிழ்நாடு மட்டும் தனித்து இருக்கிறது , இது இந்தியாவிற்கு நல்லதல்ல என்று பேசினார் . இதே கருத்தை தான் நானும் பேசினேன்.

ஒரு காலத்தில் திராவிட நாடு, தனித்தமிழ்நாடு என கேட்டிருந்த போதும் ஒன்றிய அரசிற்கும், இந்திய பாதுகாப்பிற்கும் இடர்பாடு வருகின்ற பொழுதெல்லாம் அதை பாதுகாக்கும் பொறுப்பில் நாம் தான் இருந்திருக்கிறோம், இப்போதும் இருக்கிறோம், போர்க்காலங்களில் கூட கடந்த காலங்களில் வேறு எந்த மாநில முதல்வரும் திரட்ட முடியாத அளவிற்கு அதிக அளவு நிதியை முன்னாள் முதல்வர் கலைஞர் தான் திரட்டி கொடுத்தார் என்றார்.

மேலும் பேசுகையில் கலைஞர் வச்சி செய்வார் , கலைஞர் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கூப்பிட்டு வச்சி செய்வார் என நிரூபித்து இருக்கின்ற காரணத்தால், திராவிட தத்துவத்தை உலகிற்கு வழங்கி 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவராக மு.க. ஸ்டாலின் விளங்கி வருகிறார் என்றார் தனது உரையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

எப்போதுமே சர்வ சாதாரணமாக எதாவது ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் கூட, அதில் எது முக்கிய கருவோ, அதுவே பேசு பொருளாக இருக்கும் , வருபவர்களும் அந்த கருப்பொருளை விளக்கி, எதற்காக இந்த கூட்டம் நடக்கிறது என்பதை அனைவரும் அறியும்படி பேசுவார்கள்.

ஒரு ரசிகர் மன்றத்தினர் கூட்டம் நடத்தினால் கூட அந்தப் படத்தில் நடித்த நடிகர் படம் பொறிக்கப்பட்டு பெரிதாக மேடையில் வைக்கப்பட்டு அந்தக் கூட்டம் நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் நேற்று திமுகவினரால் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் எதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்றோ, யாரெல்லாம் தமிழ் மொழியை காப்பதற்காக வெடித்து , துடித்து உயிரை விட்டார்கள் என்றோ பேசி அடுத்த தலைமுறைக்கு கடத்தவும் இல்லை,

நடைபெற்ற வீர வணக்கம் நாள் கூட்ட மேடைகளில் உயிர் நீத்த ஈகிகளின் படங்களை பெரிதாக வைக்கப்படவும் இல்லை என்று தெரியவந்தது, ஆ.ராசா கலந்து கொண்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திலும் இதே நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக, தமிழைக் காப்பதற்காக திமுகவின் தலைவர் ,தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வரும் திட்டங்களா இவை எல்லாம் ? நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், நம்ம Thanjavur, நம்ம Chennai,…

இனிவரும் காலங்களிலாவது நடித்த நடிகருக்கு ரசிகர் மன்றத்தினர் கொடுக்கும் முக்கியத்துவத்தை, மொழியை காக்க துடித்த இன்னுயிரை தந்த ஈகிகளுக்கு திமுகவினர் கொடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

63810cookie-checkகலைஞரும், மு.க.ஸ்டாலினும் வச்சி செய்வார்கள் ஆ.ராசா அதிரடி பேச்சு
2 thoughts on “கலைஞரும், மு.க.ஸ்டாலினும் வச்சி செய்வார்கள் ஆ.ராசா அதிரடி பேச்சு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!