மாநாடு 06 October 2023
சாமானியர்கள் தற்போதெல்லாம் ஏதாவது ஒரு பொருளை வாங்குவது சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு தெரிந்தால் கூட அந்த பொருளை வாங்க அவர்கள் எவ்வளவு கால அவகாசம் எடுக்கிறார்கள் , எந்த பொருளை வாங்க வேண்டும் எந்த நிறுவனத்தின் பொருளை வாங்க வேண்டும், அதை எந்த கடையில் வாங்க வேண்டும், அந்தக் கடை நம்பிக்கையானதா மக்களின் பேராதரவு பெற்றதா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் பலரிடம் விசாரித்த பிறகு அப்பொருளை வாங்குகிறார்கள் என்பதே எதார்த்தம்.
உண்மை நிலை இப்படி இருக்க மக்களிடம் பல ஆண்டுகளாக நம்பிக்கையை பெற்ற நிறுவனங்களாக பல கோடி ரூபாய் விளம்பரம் செய்து தங்களை காட்டிக் கொள்ளும் நிறுவனங்கள் உண்மையில் அப்படி இருக்கிறதா என்பதை கேள்விக்குறியாகி இருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு என்ன நடந்தது ? எங்கு நடந்தது? எந்த நிறுவனம் ஏமாற்றும் நோக்கில் நடந்து கொண்டது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம் வசந்த் அன் கோ என்று விளம்பரங்களில் தங்களை காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனம் வாடிக்கையாளரை ஏமாற்றும் போக்கில் அக்கறையின்றி நடந்ததால் வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நாடியிருக்கிறார் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது அதன் விபரம் பின்வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டையை சேர்ந்த ஏகலைவன் என்பவர் கடந்த 17-6-2018 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் இயங்கி வரும் வசந்த் அன் கோ நிறுவனத்தில் ஒனிடா எல்.இ.டி லியோ 32 இன்ச் டிவியை 24,500 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அந்த டிவி 11-4-2019 அன்று பழுதாகி இருக்கிறது ஒரு ஆண்டு கம்பெனி வாரண்ட்டி இருந்த காரணத்தால் வசந்த் அன் கோ நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்கள் கடையில் வாங்கிய டிவி பழுதாகி உள்ளது என்றும் அதனை சரி செய்து தருமாறும் வாடிக்கையாளரான ஏகலைவன் தரப்பினர் முறையிட்டதாகவும் வசந்த் அன் கோ தரப்பில் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் வாடிக்கையாளரை அலட்சியமாக பொறுப்பற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே நம்பர் ஒன் நிறுவனம் என்று தங்களை விளம்பரப்படுத்தி காட்டிக்கொள்ளும் வசந்த் அன் கோ நிறுவனம் இவ்வாறு தங்களை நடத்துவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்காத வாடிக்கையாளர் தங்களைப் போல வேறு யாரும் இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற நோக்கிலும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கிலும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததன் அடிப்படையில் கும்பகோணம் மோதிலால் தெருவில் இயங்கி வரும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்திற்கு 22-4-2019 அன்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்
அதன் பிறகும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தினர் அலட்சியப் போக்கிலேயே இப்பிரச்சனையை கையாண்டு இருக்கிறார்கள்.
அதன் காரணமாக 9-12-2019 அன்று தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த வழக்கை வழக்கறிஞர் வே.முத்துமாரியப்பன் தொடர்ந்து திறம்பட நடத்தி வந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு வாடிக்கையாளரை காப்பாற்றி கண்ணீரை துடைக்கும் படியும் வாடிக்கையாளரை ஏமாற்ற நினைக்கும் நிறுவனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.
அத்தீர்ப்பின்படி வசந்த்&கோ நிறுவனம் விற்பனை செய்து பழுதான டிவியை பெற்றுக் கொண்டு (1) புதிய டிவியை தர வேண்டும் என்றும் மேலும் (2) நட்ட ஈடாக 20,000 ரூபாய் பணமும் (3) வழக்கு நடத்திய செலவு தொகையான 10,000 ரூபாய் பணமும் வசந்த்&கோ நிறுவனம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.
இதுபோன்ற பல நிறுவனங்கள் தங்களை நியாயமானவர்கள் போல விளம்பரங்கள் மூலம் காட்டிக்கொண்டு கடைகளை நடத்தி மக்களை ஏமாற்றும் போக்கு செல்போன்கள் விற்பனை செய்யும் கடை தொட்டு பல பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்பதே எதார்த்தம் என்கிற போதும்.. பலரும் நீதிமன்றம் செல்ல நேரமின்றி விதியே என்று வீதியில் புலம்புபவர்களின் நிலையையும் அவர்களின் அனுபவத்தையும் அடுத்தடுத்து வர இருக்கிற அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழில் வெளியிடுகிறோம்.
இன்னமும் நீதியை நிலை நாட்ட நீதிமன்றமும், வழக்காடி வழிகாட்ட வழக்கறிஞர் வே.முத்துமாரியப்பன் போன்ற வழக்கறிஞர்களும், ஆதரவற்றவர்களின் குரலை வெளியே கொண்டு வர அரசியல் மாநாடு செய்திக் குழுமம் போன்றவைகளும் இருக்கிறது உறவுகளே துணிந்திருங்கள் அதேசமயம் விழித்திருங்கள்.