தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்களில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநிலத்தவர் வேலையில் சேர்ந்து இருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தவறுதலாக வேலையில் அமர்ந்து அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து அந்த வேலைகளில் தமிழர்களை பணியமர்த்த வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் பல்லாண்டு காலமாகவே தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் என்பதால் இந்தி பேசும் மாநிலத்தவரை வேலையில் அமர்த்தும் பணியை மறைமுகமாகச் செய்கின்றனர் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது.

குறிப்பாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைய நிலம் கொடுத்த சுற்றியுள்ள 22 கிராமங்களைச் சேர்ந்த பூர்வக்குடி தமிழர்கள் இன்றளவும் கொடுத்த நிலத்திற்கு உரிய இழப்பீடோ, நிரந்தரப் பணி வாய்ப்போ கிடைக்காமல் வருடக்கணக்காக அலைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பணி பாதுகாப்போ, விபத்து காப்பீடோ, ஊக்கத்தொகையோ எதுவுமின்றிப் வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொத்தடிமைகள் போல் பணிபுரிந்து வரும் நிலையில், நெய்வேலி நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகள் அனைத்தும் வட மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்குப் பணிபயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்கள் வேலை தரவேண்டி வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில் காலியாக இருந்த 259 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியர்) பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த 1582 பேரில் ஒரு விழுக்காட்டினர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநர் இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,765 பேரில் 1,600 பேர் வடவர்களாவர். குறிப்பாகக் கடந்த 2020 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் திருச்சி பொன்மலை தொடர்வண்டி பணி மனையில் 581 பணி இடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேரைத் தவிர முழுக்க முழுக்க வடமாநிலத்தவர் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்ட நிலையில், பலத்த எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போன்று 2012ம் ஆண்டுச் சென்னை ரயில்வே மண்டலத்தில் 884 காலிப்பணியிடங்களை நிரப்பியபோது தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு ரயில்வே குரூப்-டி பணிக்காக 2,362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 74 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி சென்னை, சேலம், திருச்சி, மதுரை என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடர்வண்டி கோட்டங்களில் வடவர்களே நிரம்பியுள்ளனர்.

2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தால் (BHEL) பணியமர்த்தப்பட்ட138 பொறியாளர்களில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை. 2008ம் ஆண்டு நிரப்பப்பட்ட 77 செயற்பொறியாளர் பணியிடங்களில் 17 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஆவடி கனரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நிரப்பப்பட்ட 100 சார்ஜ்மென் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கும், 2011ம் ஆண்டு நிரப்பப்பட்ட 108 பயிற்சியாளர் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது இப்படித் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒவ்வொன்றாக கணக்கிட்டால் இதைவிடவும் மிகமிகச் சொற்ப அளவில் மட்டுமே தமிழர்களுக்கான பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது