மாநாடு 16 April 2022
நடைபெற்று முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்குப்பட்ட 3வது வார்டுக்கு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகரச் செயலாளர் துரை சிங்கத்தின் மனைவி சுகந்தி துரைசிங்கம் என்பவர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர்களில் பலர் இன்னமும் கூட பதவியேற்று இத்தனை நாள் தான் ஆகிறது என்று காரணம் சொல்லிக்கொண்டு காலம் தாழ்த்துவதை காண முடிகிறது.இன்னும் சிலரோ வேலையை தொடங்குவது தெரிகிறது ஆனால் முழுமையாக முறையாக அந்த வேலை நிறைவேறியதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே தான் இருக்கிறது.
ஆனால் சுகந்தி துரைசிங்கம் என்ற இந்த மாமன்ற உறுப்பினர் பதவியேற்ற உடனேயே மக்கள் பணியை மனதார செய்ய தொடங்கிவிட்டார். அதன் வெளிப்பாடாக தான் நமது மாநாடு இதழில் மார்ச் மாதம் 12ஆம் தேதி மக்கள் பணியை மனதார செய்யும் மாமன்ற உறுப்பினர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அப்போது கருந்தட்டங்குடி பகுதியில் கிருஷ்ணன் கோவில் அருகில் கும்பகோணம் ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய சாலையில் பல மாதங்களாக பாதாள சாக்கடை வழிந்து ஓடிக்கண்டிருந்தது அதனை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.
அதன் காரணமாக அந்தப் பகுதியில் பழுது சரி செய்யப்பட்டு இப்போது கல்லூரிகளுக்கு ,பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் சிறப்பாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இன்று காலை அந்த பகுதியில் வேறு ஒரு செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது மதிமுகவின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வனும் , மதிமுகவின் மாநகர செயலாளர் துரைசிங்கம் மற்றும் மாநகராட்சி பணியில் உள்ள ஒரு குழுவினரையும் நாம் காண முடிந்தது. உடனடியாக அவர்களிடம் என்ன பணி நடந்து கொண்டிருக்கின்றது என விசாரிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் தெரியவந்தது

அந்த பாதாள சாக்கடை சரியாகிவிட்டது ஆனால் இந்தப் பகுதியில்தான் பாதாள சாக்கடையில் இருந்து வரும் நீரை மேலேற்றி அனைத்து பாதாள சாக்கடை கழிவுநீர்களும் சென்று சேரும் இடமான சமுத்திரக் கரைக்கு அனுப்பும் கிணறு உள்ளதாகவும் ,அது பாதாள சாக்கடை போட்ட காலத்தில் அமைக்கப்பட்டது என்பதும் ,அதை சரிவர சுத்தம் செய்து பராமரிக்காததின் காரணமாக சாக்கடையில் இருந்து வரும் மணலால் அடைப்பட்டு இருப்பதும் அதனால் வேறு சில இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறியதாகவும் அதை தடுக்கும் வண்ணம் இந்த கிணற்றில் அடைத்துள்ள மணல்களை எடுத்தால்தான் மற்ற பாதாள சாக்கடை கழிவுநீர்களும் வெளியேறாமல் இருக்கும் என்பதற்காக இதை சுத்தம் செய்து புதிய குழாய்களை பதிக்கும் பணிக்காக மாநகராட்சி ஊழியர்களை அழைத்து வந்து இந்த பணிகளை செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

அந்த பணிகளை எதேச்சையாக நாமே பார்க்க முடிந்தது. இந்த பாதாள சாக்கடை கிணற்றை அடைப்பு எடுத்து சரி செய்து விட்டாள் மூன்று வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை நீரும் எந்தவித இடையூறும் இல்லாமல் சேரவேண்டிய இடமான சமுத்திரக் கரைக்கு சென்று விடும் அதனால் மக்கள் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பணியை பார்க்கும்போது இவர்களுக்கு வாக்களித்த மக்கள் சரியானவர்களை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. வேறு எந்தப் பகுதியிலாவது மக்களுக்கு குறைகள் இருப்பின் நமது இதழுக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.இதன் மூலம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பணிகளை நிறைவேற்றி கொடுப்பதற்கும் மக்கள் பணி செய்பவர்களை ஊக்கப்படுத்தவும் நமது இதழ் எப்போதுமே தயாராக இருக்கிறது.

அதன்படி இவர்களின் மக்கள் பணியை மாநாடு இதழ் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது.
