மாநாடு 26 April 2026
தஞ்சாவூரின் நீர் மேலாண்மையை பார்த்து ஒரு காலத்தில் உலகமே வியந்த நிலையில் தற்போது ஒன்றை மாதங்களாக ராஜ வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நிர்வாகத்தை பார்த்து உள்ளூர் மக்கள் உள்ளம் குமுறுகிறார்கள் விவரம் பின்வருமாறு :
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா நாளை நடைபெற இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த முக்கிய தருணத்தில், நகரின் மையப்பகுதியில் பெரிய கோயில் அருகிலேயே தொடர்ச்சியாக குடிநீர் வீணாக சாலையில் ஓடிக் கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு வீதி – நிக்ல்சன் வங்கி எதிரில் கடந்த ஒன்றரை மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக தினமும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தண்ணீர் நேரடியாக சாலையில் ஓடி வீணாகி வருகிறது என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள்.

இந்த சாலைகளை தான் ராஜ வீதிகள் என்பார்கள் இந்த சாலைகளில் தான் தேரோட்டம் நடைபெறும் . இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், கோயில்கள் அதிக அளவில் உள்ளது. பள்ளி குழந்தைகள் , மாணவ மாணவிகள், முதியவர்கள், பெண்கள் என ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது.
அனைவரும் காணும் வகையில் வெளிப்படையாக இவ்வளவு தெளிவாக தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையிலும், இதை சரி செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மீது சம்பந்தப்பட்டவர்கள் வைத்திருக்கும் அக்கறையை காட்டுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் .

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நிர்வாகம், அடிப்படை சேவைகளையே சரியாக பராமரிக்காதது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்கிறார்கள் மக்கள். அதேபோல், நகரின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை அவ்வப்போது நிலவுகிறது , சில பகுதிகளில் சாக்கடை நீர் குடிநீரில் அவ்வப்போது கலப்பதும் மக்கள் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது என்கிற நிலையில், இந்த சம்பவத்தை பதிவு செய்த சமூக ஆர்வலர் பிரகாஷ் ராமலிங்கம் B.Sc., M.L. , உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் தலையிட்டு இங்கு குடிநீர் வீணாவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
