Spread the love

மாநாடு 31 July 2026

தஞ்சை அருகே சத்திரம் நெடார் கிராமபொதுமக்கள், விவசாயிகள் அறிவிப்பு;

தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு வருவாய் கிராமம் மானாங்கோரை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சத்திரம் நெடார் கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தாமரைகுளம் உள்ளது . இந்தக் குளம் சத்திரம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த தாமரை குளத்தை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர். சுமார் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.


இந்த நிலையில் தாமரை குளம் சுமார் 20 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. கரை வசதி ஏதும் இல்லாமல் உள்ளது என்றும் , 4 ஏக்கர் பரப்பளவில் இருந்த தாமரை குளம் ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கி விட்டது என்றும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குளத்தை தூர்வாரி கரை கட்டி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

இது குறித்து சத்திரம் நெடார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கூறும்போது:-


சத்திரம் நெடார் கிராமத்தில் உள்ள தாமரைக் குளம் 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பு இன்றி உள்ளது . மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் இருக்கும். மற்றபடி எப்போதும் வறண்டே காணப்படும். ஆக்கிரமிப்பால் தாமரை குளத்தின் பரப்பளவும் சுருங்கி விட்டது .

தூர்வாரக்கோரி இதற்குப் பொறுப்பான சத்திரம் நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை . சத்திரம் நிர்வாகத்திடம் கேட்டால் தூர்வாரி கொடுக்க பண வசதி இல்லை என்று கூறுகின்றனர். எனவே இனியாவது தாமரை குளத்தை விரைந்து தூர்வாரி பராமரிக்க வேண்டும். குளத்தை சுற்றி கரை வசதி செய்து கொடுக்க வேண்டும் . இதுகுறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

94310cookie-checkதஞ்சை அருகே சத்திரம் நெடார் பொதுமக்கள், விவசாயிகள் அறிவிப்பு

Leave a Reply

error: Content is protected !!