மாநாடு 7 August 2026
தஞ்சை மாநகரின் அனைத்து வார்டுகளிலும் டெங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், முன்பிருந்தது போல் குப்பை தொட்டி ஆங்காங்கே வைக்க வேண்டும்! மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இடதுசாரிகள் பொது மேடை ஆர்ப்பாட்டம்.

டெங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கை, தெரு நாய்களை கட்டுப் படுத்துதல், குப்பைத்தொட்டி வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சை மாநகராட்சி முன்பு இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ எம்எல் லிபரேசன் கட்சியின் மாநகர செயலாளர் எஸ். எம். இராஜேந்திரன் தலைமை தாங்கினார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப் பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆர்ப்பாட்டத் தினை தொடங்கி வைத்து பேசினார்.

கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கட்சி மாநகர செயலாளர் எம்.வடிவேலன, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ் முதல்வன், தொழிலாளர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகரச் செயலாளர் ஆர். ஜெயக்குமார், ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாநகரின் அனைத்து வார்டுகளின் சாக்கடைகள், தேங்கிய தண்ணீர் உள்ளிட்ட இடங்களில் கொசு மருந்துகள் தெளிப்பதில்லை. உடனடியாக கொசு மருந்து தெளிக்கப்பட வேண்டும், வரும் மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் டெங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் கடிக்கும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தொடங்க வேண்டும், குப்பைகளை கொட்டுவதற்கு ஆங்காங்கு குப்பைத் தொட்டி வைக்கப் பட்டிருந்தது.
தற்போது குப்பைத் தொட்டி அகற்றப்பட்டு நேரடியாக குப்பை சேகரிக்கப் படுகிறது. ஆனால் பழைய குப்பைத் தொட்டிகள் இருந்த இடத்தில் மக்கள் குப்பையை வீசி செல்வதால் அது காற்றில் சிதறி துர்நாற்றமும் வீசுகின்றது.இது சுகாதார சீர்கேட்டை உருவாகிறது. எனவே முன்பிருந்தது போல் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும், கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி குடிநீர் பிரச்சனை தட்டுப்பாடு ஏற்படுகிறது, குடிதண்ணீர் பிரச்சினை போக்க வேண்டும், ஆங்காங்க பாதாள சாக்கடை நீர் வெளியேறி துர்நாற்றம் ஏற்படுத்துகிறது.
பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரியாக சமமாக மூடப்படாததால் பள்ளமாக உள்ளது. இதில் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நிகழ்வதை கவனத்தில் கொண்டு பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விசிக பெனிட், என் டி எல் எப் மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமணன், பாபு, எச் எம் எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் கே.தனபால், பொருளாளர் பக்ருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
