மாநாடு 21 April 2026
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சி கோமுட்டி செட்டி தெருவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், Model Code of Conduct அமலில் இருக்கும் நேரத்தில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதைக் காட்டும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு, தேர்தல் விதிகள் வெளிப்படையாக மீறப்பட்டதா? இது போன்ற போக்கு ஏற்புடையதா என்ற கேள்வியை நேரடியாக எழுப்புகின்றன.
தேர்தல் அறிவிப்பு பிறகு புதிய சாலை, கட்டிடம் போன்ற பணிகள் தொடங்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் தெளிவான உத்தரவு. அதனை மீறி வல்லம் கோமுட்டி செட்டி தெருவில் சாலை அமைப்பு செய்யப்பட்டிருப்பது, Model Code of Conduct-ஐ புறக்கணித்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படுவது, **Representation of the People Act, 1951 இன் பிரிவு 123(7)**ன் கீழ் அரசு வளங்களை தேர்தல் பலனுக்காக பயன்படுத்தியதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தேர்தல் உத்தரவை மீறிய சூழலில், இது சட்டப்பிரிவு IPC 188 – BNS 223 ன் படி சட்டம் மீறல் தானே.

அதிலும் முக்கியமாக, அவசரமாக போடப்பட்ட இந்த சாலை தரமற்றதாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேர்தல் முன் வேலையை முடித்ததாக காட்டுவதற்காக தரம் புறக்கணிக்கப்பட்டதா? மக்கள் பணம் வீணாக்கப்பட்டதா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது வெறும் நிர்வாக அலட்சியம் அல்ல; மக்கள் நம்பிக்கையை பாதிக்கும் செயல் என்ற கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி / கலெக்டர், தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் (Flying Squad, SST) மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டியது அவசியமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பங்கு என்ன என்பதையும் தெளிவுபடுத்தி, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது. “மக்கள் பணம் – மக்கள் நலனுக்கா, தேர்தல் பலனுக்கா?” என்ற அடிப்படை கேள்வி எழுந்துள்ள இந்தச் சம்பவம், ஜனநாயகத்தின் நியாயத்தன்மையை சோதிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது தேர்தல் விதிமுறைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் சாமானிய மக்கள் மீதுதானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
