மாநாடு 19 April 2022
தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி , கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையிலும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகஅரசு தேசிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்த்து வருகிறது. இது நியாயமற்றது. தேசிய கல்விக்கொள்கையில், எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை. தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று கடைசி வாய்ப்பாக பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தங்களையும் இரு தரப்பாக இணைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
