மாநாடு 26 August 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் மரணமடைந்தாா். அவரது மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி, வன்முறை வெடித்தது. இதில் பள்ளியின் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள், பள்ளி கட்டிங்கள் தீ வைத்து எரித்து சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பள்ளியின் தாளாளா் ரவிக்குமாா், செயலாளா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர் சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது அதனையடுத்து
சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அந்தப் பிணை மனுவில் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த கண்காணிப்புக் கேமிராவில் பதிவான காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 38 நாள்களாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் தங்களை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு ஆகஸ்டு 24ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. மாணவியின் மரணத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை என்று வாதிடப்பட்டது.
அப்போது மாணவியின் பெற்றோா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீமதி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கில் காவல்துறையின் நிலைப்பாடுகள் என்ன என்று கேள்வி எழுப்பினாா். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடா்பாக விளக்கம்பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.
இதனால் கோபமடைந்த நீதிபதி சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது இன்னும் அவகாசம் கேட்கிறீர்களே என்று காவல்துறையையும், காவல்துறையின் சார்பாக ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞரின் மீதும் கடுமையான கோபம் கொண்டார்.
இந்த வழக்கில் மனுதாரா்கள் என்ன குற்றம் செய்தாா்கள் பள்ளியின் தாளாளா் மற்றும் ஆசிரியா்களாக இருப்பதற்காக கைது செய்யப்பட்டனரா? அவர்கள் எதற்காக கைது செய்யப்ப்பட்டார்கள், விவரங்களை அறிந்து வந்திருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பு அரசு வழக்கறிஞரிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், இந்த வழக்கில் மனுதாரா்கள் எதற்காக கைது செய்யப்பட்டனா் என்பது குறித்த காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
அந்த வழக்கின் விசாரணை குறிப்பிட்டபடி இன்று நடைபெற்றது அப்போது பள்ளி நிர்வாகிகளுக்கு பிணை வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்காததால், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கும் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும் போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதெல்லாம் தமிழக அரசின் சார்பில் வழக்காட வேண்டிய வழக்கறிஞர் சரியாக தனது வாதங்களை முன் வைக்கவும் இல்லை, அதேபோல பல நேரங்களில் ஆஜராகவும் இல்லை இதன் மூலம் அரசும் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு துணையாக இருக்கிறது என்று நாங்கள் கருதியது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது, என்று கொந்தளிக்கிறார்கள்.
வழக்கறிஞர் பேட்டி வீடியோ லிங்க்:https://youtu.be/K-04zeDhgEw