மாநாடு 24 July 2023
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் தவிர்த்து, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.
பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் வகையில் தென்னை தொழிற்பேட்டையை அமைக்க வேண்டும். கேரள அரசு வாங்குவது போல் உரித்த தேங்காயை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 என கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை நார் தொழிலை காப்பாற்ற வேண்டும்.
நீரா பானம் விற்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தில் தமிழ்நாட்டுக்கான துணை அலுவலகத்தை தஞ்சை அல்லது திருச்சியில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கக்கோரி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, வேதாந்தம் திடல் அருகே விவசாயிகள் தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் காந்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஈரோடு பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் (கடலூர் ஆட்சியர்) அன்புச்செல்வன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.