Spread the love

மாநாடு 02 November 2022

நவம்பர் 01 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு நாள் மாபெரும் பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைப்பு விடுத்திருந்தார், அதனையொட்டி நாம் தமிழர் கட்சியினர் உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நேற்று காலை முதலே சென்னையில் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல நிகழ்வு நடைபெறும் இடமான சென்னை ராஜரத்தினம் மைதானப் பகுதிக்கு தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், அலை கடலென நேற்று மதியம் 2 மணிக்கு சங்கமித்தார்கள்.

அந்தப் பகுதியே தமிழர் பெருங்கூட்டத்தால் ஒரு விதமான நேசம் மிகுந்த உணர்வு பெருக்கோடு ,ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதும், உடனடியாக முழக்கம் எழுப்புவதும், ஆங்காங்கே தமிழர்கள் தமிழ் இசைக்கருவிகளை இசைப்பதும் என தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்து கொண்டு தண்ணீர் குடிக்கின்ற பாட்டில்களை கூட கீழே போடாமல் அதனை சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரிப்பதும் என மிகவும் நேர்த்தியாக தமிழர்களுக்கான ஒழுக்க நெறியோடு அங்கு குழுமியிருந்தார்கள்,

இதனைக் கண்ட பொதுமக்களும், வணிக நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களும், சீமானையும் ,நாம் தமிழர் கட்சியினரையும் பெருமையுடன் வியந்து பாராட்டி புகழ்ந்தனர்.

பேரணி புறப்படும் நேரமான மாலை 3 மணிக்கெல்லாம் கொட்டுகிற மழையில் சொட்ட சொட்ட கூடிய கூட்டத்தின் எண்ணிக்கை ஏறக்குறைய 35,000 பேர் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டது.

அதிலும் குடும்பம் குடும்பமாக பலரும் தங்களது கைக்குழந்தைகளோடும், சிறுபிள்ளைகளோடும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்தது அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காவல்துறையினரும் ஆயிரக்கணக்கில் குவிய தொடங்கினார்கள், இருந்த போதும் சிறு அசம்பாவிதமும், முகம் சுளிக்கும் படியான எவ்வித செயலும் அங்கு நடைபெறவில்லை அவ்வளவு கட்டுக்கோப்போடு பேரணிக்கு ஆயத்தமாய் இருந்தார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நிகழ்வு இடத்திற்கு வந்தார் அவரைக் கண்டதும் நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியோடு உற்சாகமாக தொடர் முழக்கம் எழுப்பினார்கள், சீமானுடன், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ..மணியரசன், கி. வெங்கட்ராமன், வியனரசு, உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வந்தார்கள்,

இந்தப் பேரணிக்கு தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார்.

ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி எழும்பூர் கூவம் ஆற்று கரைக்கு வந்து சேர்ந்தது, அந்த இடத்தில் அமைத்திருந்த மேடையில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் பேசியதில் சில: தமிழர்களின் இவ்வாறான உணர்வையும் ஒற்றுமையும் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன், இந்த நிகழ்வை திறம்பட ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து எங்களையும் அதில் ஒன்றிணைத்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானையும்

பாராட்டி நன்றி கூறுகிறேன், மேலும் தமிழ்நாட்டில் இந்தி கூடாது என்று நாம் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கும் போது இந்தி காரர்களை திணித்துக் கொண்டிருக்கிறார்கள், அதனால் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது, இதனை நாம் இனிமேலும் பொறுத்துக் கொண்டு அனுமதிக்க முடியாது, அதே நேரத்தில் வன்முறையையும் பயன்படுத்த தேவையில்லை அறவழியில் போராட வேண்டும், எங்களுக்கான வேலையை எங்களுக்கு கொடுங்கள் ,தமிழர்களின் வேலையை அயலாருக்கு கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் எப்போதும் இதே போல ஒன்றாக ஒற்றுமையோடு நின்று நமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்று பேசினார்.

அதன் பிறகு மகிழ்வோடு மேடை ஏறிய சீமான்

தமிழ்நாடு நாள் நவம்பர் 01 தான், இதில் எவ்வித குழப்பமும், தமிழர்களுக்கு வராது ,வரவும் கூடாது. தமிழ்நாடு இவர்கள் பெயர் வைத்தவுடன் பிறந்தது அல்ல ஆதி காலம் முதல் தமிழ்நாடு என்று தமிழர் நிலம் இருந்திருக்கிறது, அதற்கான சான்றுகளும் நம்மிடையே இருக்கிறது, இந்த நேரத்தில் மண் மீட்பு போராட்டத்தில் போராடி உயிர்நீத்தவர்களுக்கும், தாய்மொழி தமிழ் மொழி காக்க போராடி உயிர் நீத்த ஈகிளுக்கும் எனது வீர வணக்கத்தை செலுத்துகின்றேன் என்றவர் மேலும் பேசுகையில் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல அதேபோல எங்கள் தாய்மொழி தமிழுக்கு உயிரானவர்கள் நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் இந்தி மொழி திணிப்புக்கு நாங்கள் எதிரானவர்கள்.

உலகில் அனைவரும் அவரவர் தாய்மொழியில் பேசுகிறார்கள் ஆனால் தமிழர்கள் நாங்கள் பெருமையோடு சொல்கிறோம் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியில் பேசுகிறோம் இந்த மொழியை அழிக்க எது வந்தாலும் எவர் வந்தாலும் எதிர்த்து வீழ்த்த நாங்கள் இருக்கிறோம் நாம் தமிழர் கட்சி இருக்கிறது .இனி என் மண்ணில் தமிழர்களுக்கும், தமிழுக்கும் இடையூறு செய்யலாம் என்ற கற்பனை கூட ஒருவருக்கும் வரக்கூடாது என்பதற்கான அடையாள ஆயத்த பேரணி தான் இன்று நாம் நடத்தி இருக்கும் பேரணி, உங்களுக்கு இந்தி தேவை எனில் இந்தி பேசுகிற மாநிலங்களில் முழுவதுமாக அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதை விடுத்து எங்களிடத்தில் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தி மொழி உருவாக்கப்பட்டு ஏறக்குறைய 400 ஆண்டுகள் தான் ஆகிறது பாரசீகத்தோடு குறைவாக சமஸ்கிருதத்தை கலந்ததால் உருவான மொழி உருது. அதேபோல பாரசீகத்தோடு சமஸ்கிருதத்தை அதிக அளவில் கலந்து உருவாக்கப்பட்டத்தில் வந்த மொழி இந்தி. பிந்தி வந்த இந்தியை முந்தி வந்து திணிக்கும் வேலையை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், மீறினால் இந்தி எதிர்ப்பு போராட்டம் வடிவம் மாறி இந்திக்காரர்களை வெளியேற்றும் போராட்டம் தொடங்கப்படும்.

எங்கள் கோட்பாடு இந்தி தெரியாது போடா என்பதல்ல எங்களுக்கு இந்தி வேண்டாம் போடா என்பதே எங்களின் நிலைப்பாடு. இன்னைக்கும் எங்கள் பிள்ளைகள் ராணுவத்தில் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் எந்த பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் இந்தியை படித்துவிட்டு பணியாற்ற அங்கு சென்றார்கள் ,மொழி என்பது அறிவு அல்ல அறிதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தருவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சீமான் பேசினார். இப்பேரணியில் ஏறக்குறைய 35000 பேர் பங்கேற்றதாக தெரிய வருகிறது. இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டுமல்லாமல் தமிழர்களுக்கும்  நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

55260cookie-checkகொட்டும் மழையில் கெத்து காட்டிய நாம் தமிழர் பரபரப்பு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!