மாநாடு 4 April 2022
ஒவ்வொரு நாளும் வயது உயர்வதை தவிர்க்க முடியாது என்பது போல ஒவ்வொரு நாளும் எரிபொருட்களின் விலையேறறமும் தவிர்க்க படாமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதன் காரணமாக பலரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாக கலந்து விட்ட தேனீர் கூட விலை ஏற்றம் ஆகிவிட்டது.
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வு, வாகன எரிபொருட்களாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, காபி, டீ உள்பட ஓட்டல்களில் விற்பனை இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளின் விலை பல இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 20 விழுக்காடு வரை விலைகளை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, சமீபத்தில் 268 ரூபாய் உயர்ந்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுபோல, பெட்ரோல் டீசல் விலையும் இன்று 11வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் மிக அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.118ஐ கடந்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இந்நலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சி உட்பட பல அமைப்புகளும் கட்சிகளும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல், தொடர் விலையேற்றத்தை மேற்கொண்டு வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விலையேற்றம் சாமானிய மக்களில் தலையில் விழுந்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளில் டீ, காபி உள்பட உணவு பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஓட்டல்களிலும் விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு ஓட்டல்களின் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படுவதாக தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மதுரையிலும் தேநீர் விலை ஒரு கப் ரூ.15 என விலை உயர்ந்துள்ளது. சாமானியர்களின் பானமான தேநீர் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.