மாநாடு 26 April 2022
ரயில் பயணிகள் அடிக்கடி ரயிலிலிருந்து தவறி விழுவதும் அவர்களை ரயில்வே காவலர்கள் விரைந்து காப்பாற்றுவதும் தொடர் நிகழ்வாக இருக்கின்றது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான பெட்டிகள் இல்லாதது மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் ஏறி இறங்குவதற்கு போதுமான நேரம் ரயில்கள் ரயில் நிலையங்களில் நிற்காதது தான் காரணம் என்கிறார்கள் ரயில் பயணிகள். இதேபோல ஒரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்ப தயாராக இருந்தது. ரயில் புறப்படும் நேரம் என்பதால் பயணிகள் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்குள் ஓடி வந்து கொண்டிருந்தனர்.
மேலும் பலர் அடித்து பிடித்து ரயிலில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த பிளாட்பாரத்தில் ரயில்வே பெண் காவலர் மாதுரி என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
சரியாக 11.30 மணிக்கு ரயில் புறப்பட்டபோது ரயிலில் இருந்த ஆண் பயணி திடீரென தவறி பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் மாதுரி ஓடி சென்று அந்த பயணியின் கையை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்.
சிசிடிவி காட்சி
இதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்த பயணி தனது உயிரை காப்பாற்றிய பெண் காவலர் மாதுரிக்கு நன்றி தெரிவித்தார். அங்கிருந்த ரயில் பயணிகளும் காவலர் மாதுரியை வெகுவாக பாராட்டினார்கள் இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
